நொடிக்கு நொடி’ குறும்பட பார்வையாளர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரிப்பு!

இன்று ஓசைப்படாமல் சில குறும்படங்களும் உலகளவில்  கவனிக்கப்படுகின்றன. பார்வையாளர்களால் ஆராதிக்க ப்படுகின்றன. ‘நொடிக்கு நொடி’ என்கிற அரைமணி நேரக் குறும்படம் இரண்டு வாரத்தில் முகநூலில்  எக்கச்சக்கமான  ரசிகர்கள் பார்த்து  குறும்படத்தில் ஒரு சாதனை படைத்துள்ளது .பல வி.ஐ.பிக்களும் படம் பார்த்துப் பாராட்டி யுள்ளனர். இதை ‘காமன் மேன் மீடியா’ சார்பில் சதீஷ் குமார் எழுதி இயக்கிக் தயாரித்துள்ளார். அது மட்டுமல்ல  இதில் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்துள்ளார்.இது  இவரது இயக்கத்தில் வந்துள்ள 2வது குறும்படமாகும். முதல் குறும் படம் ”இந்தியன் டூரிஸ்ட்”.
‘நொடிக்கு நொடி’யில் சதீஷ் குமார் , சஞ்சய் , கிஷோர் ராஜ்குமார் , ஸ்வாதிஷா நடித்துள்ளனர். இது வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில் ,சுழலில் சிக்கிக் கொண்ட மூன்று பாத்திரங்களில் மையம் கொள்ளும்  கதை. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒருவன் , விருப்பமில்லாத வேலையில் இருக்கும் இன்னொ ருவன் , காதலித்து ஈகோ மோதலால் பிரச்சினையில் பிரிந்துள்ள மற்றொருவன் என மூன்று பாத்திரங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை.
இக்காலத்துக்கு ஏற்றபடி நகைச்சுவை முலாம் பூசி உள்ளீடாக நல்ல கருத்தைச்  சொல்லியிருக்கிறார் இயக்குநர். கடந்தகாலத்தின் துயரத்தை எண்ணி கவலையைத் தூசு தட்டி வருத்தப்படுவதும் எதிர்காலம் பற்றி அச்சப்படுவதும்  என்று காலத்தை வீணடித்து நிகழ்கால நிம்மதியையும் அன்றாட ஆனந்தத்தையும் இழந்து விடாதீர் .இதைப் புரிந்து கொண்டால் நொடிக்கு நொடி வரும் நேரம் எல்லாமே அனுபவிக்கத் தக்க இன்பமான தருணங்கள் தான் என்று உணர வைக்கிறது கதை.
இதைப் பார்த்து விட்டு  நடிகர்கள் ராகவா லாரன்ஸ்  ,  அருள்நிதி , சிபிராஜ் . ஆரி , இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா , ‘கணிதன்’ சந்தோஷ் .’திருடன் போலீஸ்’ கார்த்திக் ராஜ் , ‘அம்புலி ‘ ஹரிஷ் ,’ டிக் டிக் டிக்’ சக்தி ராஜன் , தயாரிப்பாளர்கள்  தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி , டிரை டண்ட் பிக்சர்ஸ் ரவீந்திரன் போன்ற திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர்.
இக் குறும்படத்திற்கு ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, இசை – எம்.. எஸ் ஜோன்ஸ் , எடிட்டிங் ரிச்சர்டு , சப் டைட்டில்  ‘பாகுபலி’ புகழ் ரேக்ஸ். எழுத்து இயக்கம் ‘காமன் மேன்’ சதீஷ்குமார் .
‘நொடிக்கு நொடி’ குறும்படத்துக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.