சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். அந்த விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வந்தவரை வரவேற்க சென்னையில் முக்கிய பகுதியான கோயம்பேடு ஸ்தம்பித்து விட்டது. மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்று எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி தன்னுடைய திருமணத்திலும், தனது திருமண மண்டபம் கட்டுவது இரண்டிலும் கேட்காமலே எம்ஜிஆர் உதவியதையும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எம்ஜிஆர் குறித்த அனுபவங்களைப் பற்றி ரஜினிகாந்த அவரது சிலை திறப்பு விழாவில் பேசிய போது, “எம்ஜிஆரை முதன் முதலில் நான் பார்த்தது 1973-ல். பிலிம் இன்ஸ்டிட்யூட் வகுப்பு முடிந்ததும் டெலிபோன் பேச நான் வெளியே வந்தேன். அப்போது எல்லோரும் ஓடிப் போனார்கள் என்ன என்று பார்த்தேன். அம்பாசிடர் கார் வந்தது. கார் கண்ணாடி இறங்குது தொப்பி போட்டு ஆப்பிள் கலரும், மஞ்சள் கலரும் கலந்த சூரியன் போன்ற முகம் எட்டிப் பார்த்து சிரித்தது. இவருக்குப் போய் சந்திரன்னு பேர் வச்சாங்களேன்னு நினைத்தேன்.
அதன் பிறகு 1975-ல் ‘மூன்று முடிச்சு’ ஷூட்டிங் செட் திடீரென அமைதியானது என்ன விபரம் என்று கேட்டேன். சின்னவர் சூட்டிங் என்றார்கள். திரையுலகம் ஆனாலும் அரசியல் ஆனாலும் அவர் ராஜா மாதிரி இருந்தார். அதன் பின்னர் 1978-ல் நான் உடல் நலம் இல்லாமல் இருந்த போது என்னை நலம் விசாரித்து உடல் நலம் சரியான பின்னர் வந்து சந்திக்கச் சொன்னார்.
அப்போது போய் பார்த்தேன். அறிவுரை சொன்னார். கல்யாணம் எப்போது செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டார். இன்னும் பெண் கிடைக்கவில்லை என்றேன். சீக்கிரம் நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துகொள்ளுங்கள். பெண்ணைப் பார்த்ததும் முதலில் எனக்குத்தான் சொல்ல வேண்டும் என்றார்.
அதே போல் லதாவைப் பார்த்ததும் முதலில் என் அண்ணனுக்கு கூட சொல்லவில்லை, எம்ஜிஆருக்குதான் சொன்னேன். கேட்டு சந்தோஷப்பட்டார். கல்யாணத்துக்கு கூப்பிடு என்றார். ஆனால் பெண் வீட்டில் சில காரணங்களால் ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு மாதம் கழிந்த நிலையில் என்ன ஆயிற்று கல்யாணம் என்று கேட்டார். நான் பெண் சம்மதம். ஆனால், அவர்கள் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்று சொன்னேன்.
அவ்வளவு நாட்கள் சம்மதம் கொடுக்காத லதா வீட்டில் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்கள். எப்படி என்றால் அந்த குடும்பத்தில் பெரியவர் ஒய்.ஜி.பார்த்தசாரதியை அழைத்து ஏன் தயங்குகிறீர்கள், ரஜினி நல்ல பையன், கொஞ்சம் கோபக்காரன் உங்கள் பெண்ணை கொடுங்க நல்லா பார்த்துப்பான் என்று கூறியுள்ளார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒய்.ஜி.பி மனைவி இன்னும் உயிருடன் தான் இருக்கிறார். கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இன்று என் வாழ்க்கையில் சந்தோஷமா இருக்கிறேன் என்றால் அதற்கு காரணமே பொன்மனச்செல்வர் எம்ஜிஆர்தான்.
1984-ல் நான் திருமண மண்டபம் கட்டிக்கொண்டிருக்கிறேன். பவுண்டேஷன் எல்லாம் முடிந்து வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு வேலை நடக்கவில்லை. தடைபடுகிறது. ஒரு முக்கியமான மனிதரால் தடைபடுகிறது ஏன் என்று தெரியவில்லை. யார் போனாலும் வேலை நடக்கவில்லை. நானும் நேரே சென்றேன் நடக்கவில்லை. அப்போதுதான் நண்பர்கள் சொன்னார்கள் சிஎம்-ஐ போய் பாருங்கள் வேலை முடியும் என்றார்கள். எனக்கு இது போன்று சிபாரிசுக்கு போய் நின்றதில்லை. எம்ஜிஆரிடம் அனுமதி கேட்டேன் வரச்சொன்னார், மும்பையிலிருந்து அடித்துப் பிடித்து ராமாவரம் தோட்டம் சென்றேன். எம்ஜிஆர் அழைத்து விவரம் கேட்டார்.
திருமண மண்டபம் கட்டுவதில் உள்ள சிக்கலைச் சொன்னேன். ‘முன்பே ஏன்’ சொல்லவில்லை என்று கேட்டவர், ‘எனக்கு இரண்டு நாள் டைம் கொடு’ என்றார். நான் மும்பையிலிருந்து ஷூட்டிங்கை விட்டு வந்ததை சொன்னேன். ‘ஷூட்டிங் வேலையைப் பாருங்கள். முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள்’ என்றார்.
பத்து நாட்கள் கழித்து சென்று பார்த்தேன். மண்டபம் கட்ட தடையாக இருந்த அந்த பெரிய மனிதர் கைகட்டியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் என்னைக்காட்டி எம்ஜிஆர் பேசினார். ‘நடிகர்கள் சம்பாதிப்பது கடினம், அதை சேர்த்து வைக்க நினைப்பதை நாம் தடுக்கலாமா?’ என்று கேட்டார்.
உடனடியாக அப்போதைய வீட்டுவசதித்துறை அமைச்சர் திருநாவுக்கரசருக்கு போனை போடச்சொன்னார். 3 நாளில் நான் கேட்ட என்.ஓ.சி வந்தது. இன்று ராகவேந்திரா மண்டம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் எம்ஜிஆர் தான், அவர் போன்ற மனிதர்கள் தெய்வத்துக்கு சமானம்.
இத்தனைக்கும் நான் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகன். நான் சென்னைக்கு வந்த பிறகு, சினிமா துறைக்கு வந்த பிறகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி கேள்விப்பட்டு, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எல்லாம் பார்த்து, அவருடைய சாதனைகளை எல்லாம் பார்த்து, ‘ஆப் ஸ்கீரினிலே’, வாழ்க்கையிலே நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன். அவருடைய பெரிய வெறியனாகவும் மாறிட்டேன்.
எம்.ஜி.ஆர். 1950-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய ‘ஆக்ஷன் ஹீரோ’வாக இருந்தார். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘மலைக்கள்ளன்’ படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது சிவாஜி சார் நுழைகிறார். ‘பராசக்தி’ ஒரே ஷோவிலேயே, நடிப்புனா என்ன? என்பதையே மாற்றிவிட்டார். வசன உச்சரிப்புன்னா என்ன? என்பதையே மாற்றிட்டார். ‘இதுதான்டா நடிப்பு. வசன உச்சரிப்பு’, என்று சிவாஜி தனி புரட்சியையே உருவாக்கினார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எல்லாம் சிவாஜி சார் பின்னால் சென்றார்கள். ‘எம்.ஜி.ஆரின் கதை முடிந்தது’, என்றார்கள். அப்போது எம்.ஜி.ஆர். சொந்தப்படம் தயாரித்தார். அந்த படத்தை அவரே இயக்கினார். ‘இவருக்கு தேவையா இது? கெட்டகாலம் வந்தா இப்படி தான்’, என்று சொன்னார்கள். அந்த படம் ‘நாடோடி மன்னன்’. அது இதிகாசம் படைத்தது. டைரக்டர்கள் எல்லாம் நடுங்கி விட்டார்கள். தான் யார்? என்று நிரூபித்தார், எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர். ‘செட்டு’க்குள் வந்தாலே இயக்குனர்களுக்கு வியர்க்கும். அந்த மாதிரி சாதனை படைத்து காட்டியவர்.
அவருடைய காலத்தில் சினிமாவில் யாருடன் போட்டி என்றால் அது சிவாஜி கணேசனுடன் தான். அரசியலில் அவருக்கு யார் போட்டி?. கருணாநிதி. அவரை போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி, ராஜதந்திரி இந்தியாவிலேயே கிடையாது. அவரை 13 ஆண்டுகள் கோட்டைக்கு வந்து முதல்-அமைச்சர் நாற்காலி பக்கமே திரும்பி பார்க்காமல் வைத்தவர் எம்.ஜி.ஆர்., இது என்ன சாதாரண சாதனையா?
13 ஆண்டுகள் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மீது அக்கறை. மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்தது. ஒவ்வொரு குடிசையிலும் ஒரு விளக்கு இலவசமாக கொடுத்தார். ஒவ்வொரு கிராமத்துக்கும் பஸ், சாலை வசதி கொடுத்தார். 13 ஆண்டுகள் 1 கிலோ அரிசிக்கு ரூ.1.45 காசு, அதற்கு மேல் தாண்டவில்லை. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு ஒரு வகுப்பில் 100 குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அதில் 30 குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆர். வந்த பிறகு எல்லோருக்கும் சாப்பாட்டு போட்டார்.
ஏழை மக்கள் சைக்கிளில் 2 பேர் சென்றால், போலீசார் பிடித்து விடுவார்கள். 2 பேர் செல்லலாம் என்று அந்த சட்டத்தை மாற்றினார். அப்போது சந்தேகத்தின் பேரில் யார் மீது என்றாலும் வழக்கு போடலாம். அதையும் மாற்றினார். ரேஷன் கடைகள் ஆரம்பித்தார். அதனால் தான் 13 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்தார். அமெரிக்காவில் இருந்த போது அவர் உயிரோடு இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவரிடம் பேச முடியாது, செயலாற்ற முடியாது என்று சொன்னாலும், அந்த மகான் உயிரோடு இருந்தால் மட்டும் போது அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்லி ஓட்டை குத்தினார்கள்.
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகும், அவருடைய சமாதியில் உள்ள கைகடிகாரம் ஓடுகிறதா? என்று இன்னும் பொதுமக்கள் கேட்கின்றனர். அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் ஒரு மர்ம மனிதர், மாய மனிதர். அந்த ஆண்டவருடைய சக்தி, அவரை இயக்கிக்கொண்டிருந்தது. மூகாம்பிகை அம்மன் தான் அவரை இயக்கியது. மதுரை வீரன் தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தார்” ” என்று ரஜினிகாந்த் பேசினார்.