கோலிவுட் பிரச்னை: முதலமைச்சரிடம் பேரணியாக சென்று சந்தித்து முறையிடத் திட்டம்! விஷால்-

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1 ஆம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து விளக்குவதற்காக  நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஷால். அதில் கார்த்தி, செல்வமணி, விக்ரமன், எஸ்.ஆர்.பிரபு, பி.சி.ஶ்ரீராம் என சினிமாத்துறை சங்கங்களின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஷால்,  ‘திரையுலகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும், அதுவரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று தெரிவித்தார்.  விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.

விஷால் பேசும் போது “பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும்போது, எந்தவித சிரமமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். அனைத்துத் திரையரங்குகளிலும் புரொஜக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அத்துடன், டிக்கெட் விற்கும் முறையை கணினி மயமாக்க வேண்டும். ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது வசூலிக்கப் படும் 30 ரூபாய் எக்ஸ்ட்ரா கட்டணம், மக்களுக்குப் பெரும் சுமையாக உள்ளது. இது யாருக்கான லாபம் என்று தெரியவில்லை. சினிமா சாராத ஒரு நிறுவனம் இங்கே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது.

ஆனால், தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து கொண்டே இருக்கிறோம். தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது. எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். இதை வேலை நிறுத்தம் என்று சொல்வதைவிட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம்.

தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். எனவே, தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, பேரணியாகச் சென்று மனு கொடுக்க இருக்கிறோம். இதற்காக அனுமதி கேட்டுள்ளோம். அனேகமாக வருகிற புதன்கிழமை பேரணி நடத்தலாம் என்று நினைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார் விஷால்.