தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”.
 
“காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது.
 
இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், நாசர், தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், நடிகைகள் ரேவதி, அனுஹாசன், ரேகா, பார்வதி நம்பியார் என மிகப்பெரிய பட்டாளமே இந்த கதைக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
 
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகும் இப்படத்தை, மலையாளத்தில் ஏழு திரைப்படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிருக்கிறார். “ஃபிராகிரண்ட் நேச்சர் ஃபிலிம்ஸ்” சார்பாக சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
 
மேலும், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் கே.ஜே.ஜேசுதாஸ் இணைந்து “கேணி” திரைப்படத்திற்காக பாடியிருக்கும் “அய்யா சாமி” பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.