எல்லா தியேட்டர்களையும் 3 டியா மாத்தணும் – லைகா அட்வைஸ்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் ‘2.0’ ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனத்தின் தமிழக செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம், அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். அதாவது ரஜினியின் ‘2.0’ படத்தை 3டி-யில் ரிலீஸ் செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு லாபம் கிடைக்கும். அதனால் அனைத்து திரையரங்கையும் 3டி-யில் மாற்றுவது குறித்துதான் இப்போதே பேசத்தொடங்கியிருக்கிறது லைகா நிறுவனம்.

இந்நிகழ்வில் ராஜூ மகாலிங்கம் பேசியதாவது: “400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம், முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.“டால்ஃபி அட்மாஸ், க்யூப் எனப் பல டெக்னாலஜிகளை ரசிகர்களுக்காக அப்டேட் செய்தது போல, 3டியும் இனி திரையரங்கில் அவசியம். டிஜிட்டலில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த திரையரங்கை அப்டேட் செய்ய வேண்டும். சீனாவில் 20000-த்திற்கும் அதிமான 3டி திரையரங்குகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 1500 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. நிறைய திரையரங்குகள் 3டி-யில் மாற்றப்பட வேண்டும் என்று விருப்பப்படுகிறோம்.

இதற்கிடையில் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி தொடர்பான விஷயங்கள் முழுமையாக முடிவுக்கு வரும் வரை புதிய படங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்று தலைமை அலுவலகத்திலிருந்து கூறியுள்ளார்கள். ஆகையால் இந்த தொழிலில் இருக்கும் தொழிலாளர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். லைகா நிறுவனம் சார்பாக தமிழக அரசை, கேளிக்கை வரியை நீக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பேசினார் ராஜூ மகாலிங்கம். லைகா நிறுவனம் ‘கத்தி’ படத்தின் மூலம் சினிமா தயாரிப்பில் இறங்கியது. அடுத்ததாக ‘2.0’, ‘வடசென்னை’, ‘சபாஷ் நாயுடு’, ‘கரு’, ‘இம்சை அரசன் 2’, ‘இப்படை வெல்லும்‘ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருப்பூர் சுப்ரமணியம் பேசியதாவது: ”ஒரே நாடு.. ஒரே வரி.. என்பதை கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். 10 வருடங்களாக தமிழக திரையரங்குகள் மீது டிக்கெட் விலையை அதிகப்படுத்தி வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நீங்கள் 15 வருடங்களாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கிறீர்கள். எங்களுக்கு ஒரு நியாயமான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துக் கொடுங்கள். தமிழகம் முழுவதும் இணையம் வழியாக டிக்கெட் கொடுக்கிறோம். அனைத்து டிக்கெட்களிலும் விலையைப் போட்டு, ஜிஎஸ்டி எண்ணைக் குறிப்பிட்டே ஜனங்களிடம் அளிக்கிறோம். சினிமாவில் எந்தவொரு தவறும் நடைபெறாமல் இருப்பது எங்களுடைய பொறுப்பு என முதலமைச்சர் எடப்பாடி அவர்களிடமே உறுதிக் கொடுத்துள்ளோம்.

மக்களிடம் தமிழ் சினிமாவை கொண்டு செல்ல எங்களுக்கு உறுதுணை புரியுங்கள் என்று முதல்வரிடம் எடுத்துரைத்தோம். அதை வெகுவாக பாராட்டினார். இந்தியாவின் பெருமையைப் பேசப்படுவதற்கு எப்படி ‘பாகுபலி’ என்ற படம் வந்ததோ, அந்த சாதனையை ‘2.0’ முறியடிக்க வேண்டும். அதை தமிழனாக விரும்புகிறேன். அது நடக்கும் என நம்புகிறேன்”இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் பேசினார்.

இந்நிக்ழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன் கூறுகையில்: முன்பெல்லாம் 2டியில் எடுத்து 3டியாக மாற்றுவார்கள். ஆனால் 2.0 படம் முழுக்க முழுக்க 3டியில் எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 960 திரையரங்குகள் இருந்தாலும் 3டி தொழில்நுட்பம் 300 தியேட்டர்களில் மட்டுமே உள்ளது. இந்த பயிற்சி மூலம அனைத்து தியேட்டர்களும் 3டி தொழில்நுட்பத்திற்கு மாற வாய்ப்புள்ளது. 30% கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. இன்று மாலையோ அல்லது நாளைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.மேலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கும் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.