கலைமாமணி அவார்ட்டை குடுங்கய்யா! – சித்ரா லட்சுமணன் நினைவூட்டல்!

தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 8 ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது. கலை, பண்பாட்டை வளர்ப்பதற் காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடைசி யாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளை வழங்கி கலைஞர்களை கவுரவிக்க வேண்டும் தமிழக அரசுக்கு நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிகையில்,”மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தைக் கலைஞர்களுக்கு தருவது ரசிகர்களின் கைதட்டல்களும், பாராட்டுக்களும், அவர் களது திறமையை அங்கீகரிக்கும் விதத்திலே வழங்கப்படுகின்ற விருதுகளும்தான். கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாததால் திரை உலகத்தையும் திரைப்படக் கலைஞர் களையும் தமிழக அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை அடியோடு போக்கி திரைப்படக் கலைஞர்களின் எண்ண ஓட்டத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுக்கு தரப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை ஒரே நாளில் அறிவித்த தங்களுக்கு கலை உலகம் மிகப்பெரிய அளவிலே நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

விருதுகளோடு இணைந்து சிறந்த தமிழ் படங்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையையும் அறிவித்து வாட்டத்தோடு இருந்த பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்களது கொடை உள்ளத்தை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.இந்த விருதுகளைப் போலவே 1959ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகளும் 2011ஆம் ஆண்டு முதல் எந்த கலைஞருக்கும் வழங்கப்படவில்லை என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.கடந்த எட்டு ஆண்டுகளுக்கான வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளையும் அன்பு கூர்ந்து உடனடியாக அறிவித்து தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களையும் தாங்கள் கவுரவிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்