இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது! – மத்திய அரசு அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2017-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரையுலகில் ஆயிரம் திரைப்படங்களை கடந்து சாதனைப் படைத்துள்ள இசைஞானி இளையராஜாவிற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக இசையை உலகளவில் பிரசித்தியடைய செய்து, தனது அபரிமிதமான இசைத் திறமையாலும், இசை நுணுக்கத்தாலும் இசையுலகமே அவரை ‘இசைஞானி’ என்று பெயர் சூட்டும் அளவிற்கு உயர்ந்தவர், ‘இசைஞானி’ இளையராஜா. இந்தியாவின் தலைச்சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழும் இவர், இசைத்துறையில் மிகவும் புலமைப் பெற்றவராக விளங்குகிறார். 1976ல் ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், இது வரை 950க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள். இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர்,
இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இது வரை இளையராஜாவுக்கு கிடைத்த விருதுகளின் பட்டியல்:

தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றவர். 1988-ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது இசையில் சாதனை புரிந்ததற்காக 1994-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர், டாக்கடர் பெற்றவர். 2010-இல் பத்ம பூஷண் விருது. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப் பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள், 1985இல் – சாகர சங்கமம் (தெலுங்கு) 1987இல் – சிந்து பைரவி (தமிழ்), 1989இல் – ருத்ர வீணை (தெலுங்கு), 2009இல் – பழஸிராஜா (மலையாளம்), 2016இல் – தாரை தப்பட்டை (பின்னணி இசை) ஆகியன ஆகும். தற்போது நாட்டின் 2-ஆவது உயரிய குடிமகன் விருதான பத்மவிபூஷண் விருதை 2018-ஆம் ஆண்டுக்காக பெறுகிறார் இசைஞானி.

இந்நிலையில் தற்போது பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

விருதுக்கான தகுதியை இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்வதாக நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைக்கடவுள் இளையராஜாவுக்கு நாட்டின் 2-வது உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது நடிகர் சங்க தலைவர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விருது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா மீடியாக்களிடம், “மத்தியஅரசு அறிவித்துள்ள விருது தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்த பெருமை . மத்திய அரசின் விருதை ஏற்றுக்கொள்கிறேன் .விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வேன் என மத்திய அரசிடம் கூறி உள்ளேன். விருது வழங்குவதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை கவுரவிப்பதாக கருதுகிறேன்” என கூறினார்.