தயாரிப்பாளர் சங்க விவகாரம் : ஐகோர்ட் உத்தரவையடுத்து பூட்டு அகற்றம்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அவருக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள். நிர்வாகம் சரியாக செயல் படவில்லை என்று சங்க வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சங்க அலுவலகத்தைப் பூட்டினார்கள். விஷால் நேற்று (20) காலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார்.

அப்போது அவருக்கும் போலிசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்குத் தொடர்ந்தது

அதில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், விஷால் எதிர்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயாரிப்பாளர் சங்க செயல் உறுப்பினர் அன்புதுரை, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, “முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை சங்க அலுவலகத்திற் குள் நுழைய விடாமல் எப்படித் தடுக்க முடியும்? சங்க அலுவலகத்திற்கு எப்படி சீல் வைக்க முடியும்? சங்க விவகாரங்களில் காவல்துறை எப்படி தலையிட முடியும்?” என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட வில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, “சங்கங்களின் துணைப் பதிவாளர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு நாளை சென்று அங்கு வைக்கப்பட்ட சீலினை அகற்ற வேண்டும் அனைத்து அசல் ஆவணங்களை யும் துணைப் பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு ஜெராக்ஸ் காப்பிகளை இரு தரப்பினரும் வைத்து கொள்ளலாம்” என உத்தரவிட்டார். அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதி அளிப்பதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி, சங்கத்தின் அனைத்து ஆவணங்களையும் சங்கங்களின் துணை பதிவாளரிடம் ஒப்படைக்க நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், “நேற்று நடந்த கசப்பான சம்பவத்திற்கு இன்று தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு எல்லோர் சார்பாகவும் நீதிபதிக்கும், நீதிமன்றத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி என்று மூன்று பிரிவுகள் இருக்கின்றன. சில சமயம் நிர்வாகத்துறையும் சட்டத்துறையும் சரியாக செயல்படவில்லை யென்றால், நான் கடவுளாக நம்பும் நீதித்துறை அதை சரிபடுத்திவிடும்.

145 பிரிவு என்பது தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல செயல் செய்ய முற்படும்போது, குறுக்கே ஏற்பட்ட தடை தகர்ந்து, மீண்டும் அதை செயல்படுத்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. நாங்கள் அந்த நல்ல செயலைத் தொடர்ந்து செய்வோம். இதில் யாருக்காவது ஏதேனும் சந்தேகம் இருப்பின் அலுவலகம் இங்கு தான் இருக்கும். உறுப்பினராக இருக்கும் யாவரும் வந்து கேட்டு தெளிவு பெறலாம். உறுப்பினர் அல்லாதவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை. என் மேல் வழக்கு தொடுத்தவர்கள் உறுப்பினர் அல்லாதவர் தான். மறுபடியும் சொல்கிறேன் அவர்கள் செய்தது மிகவும் தவறு. ஆனாலும், தயாரிப்பாளர்களுக்கு தேவையானதை செய்யும் முயற்சியில் உயிரைக் கொடுத்தாவது தொடர்ந்து பாடுபடுவோம்.

இளையராஜா இந்திய சினிமாத் துறையின் மாபெரும் கலைஞர். அவரை கௌரவப்படுத்துவது தயாரிப்பாளர்களான எங்களின் கடமை. இந்த விழாவை பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் பிரம்மாண்டமாக கொண்டாடுவோம். மேற்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கூறிய அனைத்தும் நடக்கும்.

நீதிமன்றத்தின் ஆணைப்படி நாளைக் காலை அலுவலகத்தை முறைப்படி திறப்பார்கள்.

இதுபோன்ற விழா நடத்துவது புதிதல்ல. அதுமட்டுமல்லாமல், இதுபோல் ஒரு கலைஞர் இனிமேல் வரமுடியாது. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து உலகம் முழுவதும் பிரபலமாகி யிருக்கிறார். அவர் புரிந்த சாதனைக்கு விழா நடத்துவது இதுவே தாமதம் தான். அதற்கு ஏன் இவ்வளவு தடையும், எதிர்ப்பும் என்று தெரியவில்லை. இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில், அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

விழா முடிந்ததும் சங்கத்திற்கான பொதுக்குழுக் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன நிறைவேற்றியிருக்கிறோம் என்பது அனைவர்க்கும் தெரியும். செயலில் காட்டுவதற்கு தான் நாங்கள் வெளியில் சொல்லாமல் இருந்தோம். உறுப்பினர் அல்லாதவர்கள் கூறும் குற்றச்சாட்டுவது சரியல்ல. கணக்கு வழக்குகளை முறையாக வைத்திருக்கிறோம். அதை எல்லோரிடமும் காட்டுவோம். கடந்த 3 வருட காலமாக நாங்கள் கணக்குகளை கொடுத்து கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் அதைச் சரியாக பார்ப்பதில்லை.

நான் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? ஏற்கனவே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியலுக்கு அனைவரும் வரலாம். அது அவரவர்களின் சுதந்திரம். ஒரு தவறு நடந்தால் அதற்கு கருத்து கூறும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்று அரசியலமைப்பு கூறுகிறது. அரசியல் என்பது தனிப்பட்ட நபருக்காக ஒதுக்கப்பட்ட துறை அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

என் மேல் 145 பிரிவின் கீழ் ஏன் வழக்குத் தொடுத்தார்கள் என்று தெரியவில்லை. 145/151 என்ற பிரிவு நில ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்டது. அதை என் மேல் தொடுத்தது தவறு என்று நீதிமன்றமும் கூறியது. மேலும், முறைகேடாக வெளியிடும் சமூக வலைத்தளங்களை ஒரே நேரத்தில் முடக்கும் போது, சட்டவிரோதமாக திரைப்படங்களை வெளியிடும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வலைத்தளத்தை ஏன் இன்னும் முடக்கவில்லை. கடந்த வாரம் முறைகேடாக நடத்தும் சுமார் 850 வலைத்தளங்களை முடக்கியுள்ளது.

இந்த வழக்கில் உறுதுணையாக இருந்த என் நண்பர் கிருஷ்ணாவிற்கும், வழக்கறிஞர் பிரேம், சங்க உறுப்பினர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ‘By Law’ பிரிவின்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.