எனது நோக்கமே, காலத்தால் அழியாத 100 பாடல்களை கொடுக்க வேண்டும் – டி.இமான் ஆசை!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் டி. இமான். மெகா பட்ஜெட் படமோ, கொஞ்சூண்டு பட்ஜெட் படமோ இவரது பாடல்கள் மட்டும் அந்த படத்திற்கு தனி அந்தஸ்த்தைக் கொடுக்கும். அதே மாதிரி சூப்பர் ஹீரோ, புது முக நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசைப் பணி தொடரும். அதனால்தானோ என்னவோ  குறுகிய காலத்தில் அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரையேச் சாரும். 15 ஆண்டுகள் என்ற அசாதாரணாமான இசைப் பயணத்தில் 100 படங்களுக்கு இசையமைப்பது என்பது எளிதான காரியமில்லை. அறிமுகமான தினத்திலிருந்து இன்று வரை எந்த விதமான எதிர்மறை விமர்சனங்களும் சந்திக்காமல், எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செலவதில் மட்டுமே கவனம் செலுத்தியவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசையமைப்பாளர் டி.இமான் தான்.

இவர் 2002 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.இந்த பதினைந்து ஆண்டுகளில் எந்த வகையான ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாத அற்புதமான பயணம் இவருடையது. இசையைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்தாமல் இன்று மிகப்பெரிய இடத்தை அடைந்திருக்கிறார். மெலடியா?, குத்துப்பாடலா? எதிலுமே தனித்து நிற்கக் கூடிய ஒலி வடிவத்தை அடையாளமாக்கிக் கொண்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு வரையிலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் பயணித்தவரை, அப்படியே வேரொறு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றது “மைனா” திரைப்படம் தான். அதுவரை பாடல்களுக்காக மட்டுமே அறியப்பட்டிருந்த இமான், முதல் முறையாக பின்னணி இசையின் மூலம் தன்னை இந்த உலகத்திற்கு அடையாளப் படுத்திக் கொண்டார் மைனா படத்தின் மூலம்.

அதிலிருந்து அவரது இசையின் வடிவம் வேறாக மாறி “மாஸ்+கிளாஸ்” என சமமாக பயணித்து அடுத்தடுத்த வெற்றிகளை இமானுக்குத் தந்தது. இதன் தொடர்சியாக இன்னும் சில நாட்களில் ரிலீஸாக இருக்கும் “டிக் டிக் டிக்” இமானுக்கு நூறாவது படம். இந்த மகிழ்வான தருணத்தை பத்திரிக்கையாளர்களுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் போது மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்டார். அவருடைய 4 வயதிலிருந்து இன்று அவருடன் பயணிக்கும் அத்தனை பேருக்கும் ஒருவரையும் விடாமல் அவர் நன்றி சொன்ன பாங்கும், பொறுமையும் நிச்சயமாய்ப் பாராட்டக் கூடியது.

“நான் 100 படங்களுக்கு இசையமைத்தவன்” என்ற எந்த மமதையும் இல்லாமல் இருக்கிற இமான் தனது இசைப் பயணம் குறித்தும், வாழ்க்கை பயணம் குறித்தும் பகிர்ந்துக்கொண்டார்.

மீடியாக்களிடம் பேசிய போது அவர் ‘பள்ளி படிக்கும்போதே கிபோர்டு பிளேயராக பணியாற்றிய துவங்கிய அனுபவத்தை சொல்லியவர், இரண்டு ஆண்டுகள் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானா வாசித்ததை நினைவு கூர்ந்தார். பிறகு இசையமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர், சுமார் 250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசை யமைத்துள்ளார். ரங்கநாதன் தெருவில் உள்ள எல்லா பிரபல கடைகள் & நிறுவனத்திற்கு ஜிங்கிள்ஸ் போட்டதாக சொன்னவர் இன்றளவும் இந்த விளம்பர படங்களுக்கு இசையமைத்ததன் மூலம், குறைந்த நேரத்தில் மக்களை கவரும் வகையில் இசையமைப்பது எப்படி? என்பதை கற்றுக்கொண்டேன், என்றவர் சீரியல்களுக்கு இசையமைத்ததும் தனக்கு சிறந்த அனுபவம், என்று கூறினார். இவர் போட்ட ஜிங்கில்ஸ் ‘ மாப்பிள்ளை வாரான்.. மாப்பிள்ளை வாரான்.. மாடு வண்டியிலே’ ;ராம்ராஜ் காட்டன்..’ போன்ற விளம்பரங்களை ரிமைண்டர் செய்து பெருமைப்பட்டு கொண்டதுடன் ஆச்சரியப்படுத்தவும் செய்தார்..

மேலும் தனது முதல் திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும், தனக்கு இரண்டாம் வாய்ப்பாக ‘தமிழன்’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த ஜி.வி -க்கு நன்றி தெரிவித்தவர், தான் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கம் பகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்தவர் அதற்கும் முன்னதாக தன்னை சின்ன திரைடில் அறிமுகப்படுத்திய குட்டி பத்மினிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொன்னார்..

தொடர்ந்து பேசியவர், 100 படங்களுக்கு இசையமைத்துவிட்ட நன் இதனை அப்படியே 200, 300 என்று மாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல, நான் திரும்பி பார்க்கும்போது எண்ணிக்கை 100 ஆக இருந்தது. இதை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று என் குடும்பத்தார் விரும்பினார்கள். எனது நோக்கமே, காலத்தால் அழியாத 100 பாடல்களை கொடுக்க வேண்டும் என்பது தான். ரசிகர்கள் என்று நான் என்றுமே சொல்ல மாட்டேன், இசை பிரியர்கள் என்று தான் சொல்வேன். அப்படிப்பட்டவர்கள் இமான் என்ற போல்டரில் காலத்தால் அழிக்க முடியாத எனது 100 பாடல்களை வைத்திருந்தால், அது தான் என் இசை வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நான் கருதுகிறேன் என்றார்.

இதனிடையே பிரபலமான பல பாடலாசிரியர்களின் வரிகளுக்கு இசையமத்தாலும் யுகபாரதி – இமான் கூட்டணி நினைவில் நிற்கும்படியான பல பாடல்களைக் கொடுத்துவருகிறது. “எனது மிகப் பெரிய பலம் யுகபாரதி சார்தான். நான் இதுவரை 120 புதிய குரல்களை எனது இசையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் தமிழர்கள்” என்று இமான் கூறியுள்ளார்.

ஸ்ரேயா கோஷலுடன் பணியாற்றுவது குறித்துப் பேசிய இமான், “நான் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொண்டு பாட அழைக்கும் பாடகி அவர் ஒருவர் தான். நேர நெருக்கடி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கித் தருவார்” என்று தெரிவித்து நெகிழ்ந்தவருக்கு மனம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துகள்