எம்.ஜி.ஆர். அனிமேசனில் ‘நடிக்கும்’ ‘ கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’-வுக்கு பூஜை!

0
314

எம்.ஜி.ஆர். நடித்து 1973_ல் வெளிவந்த “உலகம் சுற்றும் வாலிபன்”, பல சாதனைகளைப் படைத்தது. திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது “உலகம் சுற்றும் வாலிபன்”. ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி (“எக்ஸ்போ 70”) நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம். எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர்.

லதாவுக்கு இதுதான் முதல் படம். விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜ×வாகவும் எம்.ஜி.ஆர். நடித்தார். விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான். அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க, பைரவன் (அசோகன்) எண்ணுகிறான். இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு நாடுகளில், பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான். இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான். அதனால் முருகன் நினைவு இழந்து, மயக்க நிலையை அடைகிறான். இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜா வருகிறான். எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான்.

ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மற்றும் டோக்கியோ டவர், மாபெரும் கடை வீதியான “கின்சா”, பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் “நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா” என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது.

சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன. கண்ணதாசன் எழுதிய “அவள் ஒரு நவரச நாடகம்”, “லில்லி மலருக்குக் கொண்டாட்டம், “உலகம்… உலகம்” ஆகிய பாடல்களும், வாலி எழுதிய “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே”, “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ”, “பன்சாயி…” ஆகிய பாடல்களும், புலமைப்பித்தன் எழுதிய “சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. “நமது வெற்றியே நாளைய சரித்திரம்” என்று தொடங்கும் “டைட்டில்” பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர் புலவர் வேதா. 11_5_1973_ல் இப்படம் திரையிடப்பட்டது. சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9_ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் “ஹவுஸ் புல்” ஆயின. இந்த தியேட்டரில், “மெக்கனாஸ் கோல்டு” என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து.

“இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்” என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, “உலகம் சுற்றும் வாலிபன்” முறியடித்தது. 182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது. சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 31 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100_வது நாளைக் கண்டன. மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”தான். இந்த படத்தைப்போல, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தை தயாரித்து நடிக்க திட்டமிட்டார். ஆனால், அவருடைய அந்த கனவு நனவாகவில்லை. எம்.ஜி.ஆர். திட்டமிட்டு நடக்காத அந்த படத்தை, தற்போது வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகனுமான ஐசரி கணேஷ் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர்.தான் நடிக்கிறார். எப்படியெனில், அமெரிக்காவில் அனிமேஷன் தொழில் நுட்பத்தின் மூலம் எம்.ஜி.ஆரையே நடிக்க வைப்பதுபோல, இந்த படம் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி யார்? என்பது குறித்து அடுத்த ஒருமாதத்தில் ஐசரி கணேஷ் அறிவிக்க இருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் ஐசரி கணேஷின் தகப்பனாரும், எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவருமான ஐசரி வேலன் நடிப்பது மிகவும் சிறப்புக்குரியது.

அனிமேஷன் படத்தின் கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் பொறுப்பை எம்.அருள்மூர்த்தி ஏற்றுக்கொண்டிருக்கிறார். கவிஞர் வைரமுத்து திரைப்பட பாடல்கள் எழுதுகிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை ராக்கி ராஜேஷ் வடிவமைக்கிறார். நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் நடனக் காட்சிகளை அமைக்கிறார்.

இந்த படத்தின் தொடக்கவிழா நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியான பழைய சத்யா ஸ்டூடியோவில் நடக்கிறது.

இதுகுறித்து ஐசரி கணேஷ், ‘கூறும்போது, “என் தந்தை ஐசரி வேலன் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். என் தந்தையும், எம்.ஜி.ஆரைத்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்து வாழ்ந்தவர். அப்படிப்பட்ட புரட்சித்தலைவர் கனவு நனவாகாமல் போய்விடக்கூடாது என்ற வகையில், அதை நனவாக்கும் வகையில் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தை நான் தயாரிக்கிறேன். அனிமேஷன் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. இது தமிழ் திரைப்பட வரலாற்றில் யாரும் தயாரிக்காத ஒரு முயற்சியாகும். இந்த படம் நிச்சயமாக பார்ப்பவர்களை பிரமிக்கச்செய்யும். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற எனது நிறுவனமும், நடிகர் பிரபுதேவா ஸ்டூடியோவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளான நாளை இந்த படத்தின் தொடக்கவிழா நடக்கிறது. 102-வது பிறந்த நாளான 17.1.2019 அன்று இந்த படம் உலகம் முழுவதிலும் வெளியிடப்படும். தொடக்க விழா பூஜைக்கு திரைப்பட உலக பிரமுகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொள்கிறார்கள்.”என்று ஐசரி கணேஷ் கூறினார்.