தமிழ் திரையுலகத்தில் வில்லன் எனும் கதாபாத்திரத்திற்கு முதல் அடித்தளம் இட்டவர் எம்.என்.நம்பியார். திரையில் இவரை பார்க்கும் ரசிகர்கள் அவரை பொல்லாதவனாகவும் அநியாயம் அட்டூழியங்களை செய்யும் அரக்கனாகவும் பார்க்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பால் திரையுலக வரலாற்றில் வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்த பழம் பெரும் வில்லன் நடிகன் அவர். அதிலும் எம்.ஜி.ஆருடன் இவர் சண்டையிடுவதை பார்த்து இவரை அடிக்க பாய்ந்து , சினிமா தியேட்டர்களில் உள்ள திரையைக் கிழித்த ரசிகர்களும் உள்ளனர். அவ்வாறு திரை உலகையே தன்வசப்படுத்தி யிருந்த வில்லன் எம்.என்.நம்பியார். இவர் கடந்த 1919 ம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் இந்திய கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பெருவமூர் எனும் ஊரில் பிறந்தார்.
இவரது தந்தை கேளு நம்பியார் என்பவராவார் இவர் குடும்பத்தின் கடைசிக் குழந்தையாக பிறந்தார் எம்.என். நம்பியார் எனப்படும் மாஞ்சேரி நாராயணன் நம்பியார். இவரின் 8 வது வயதிலேயே அவரது தந்தை இறந்த நிலையில் அவர் தனது அண்ணனது பராமரிப்பில் வளர்ந்தார். அதற்கமைய உதக மண்டலம் எனும் ஊரிலுள்ள உயர் நிலை பள்ளியொன்றில் 3 ம் வகுப்பு வரை மாத்திரமே நம்பியார் கல்வி பயின்றார். தொடர்ந்து படிப்பதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காததன் காரணமாக அவர் தனது 13 வது வயதிலேயே நாடக குழுவொன்றுடன் இணைந்து கொண்டார். அதில் நம்பியாருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக அவர் நாடக குழுவில் சமையலறை உதவியாளராகவே பணியாற்றினார். தொடர்ந்து சமையல் உதவியாளராகவே பணியாற்றிய அவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தொழில் புரிந்த நாடக கம்பனி கடந்த 1935 ம் ஆண்டு ராம்தாஸ் எனும் நாடகத்தை பக்த ராம்தாஸ் எனும் பெயரில் திரைப்படமாக எடுத்தது. குறித்த திரைப்படத்தில் நம்பியாருக்கு மாதண்ணா எனும் நகைச்சுவை வேடம் வழங்கப்பட்டது. இதுவே எம்.என்.நம்பியார் நடித்த முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் குறித்த நாடக குழுவின் நாடகங்களில் சிறிய வேடங்களில் நம்பியார் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் தொடர்ச்சியாக பல நாடகங்களை நடித்து தனது நடிப்பு திறமைகளை வெளிக்காட்டிய எம்.என்.நம்பியார். கடந்த 1939 ம் ஆண்டு காலப்பகுதிகளில் மிகப்பெரிய நாடக நடிகராக வளர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1944 ம் ஆண்டு காலப்பகுதிகளில் நம்பியாருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதையடுத்து கடந்த 1946 ம் ஆண்டு வெளிவந்த வித்தியாபதி ராஜகுமாரி ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1947 ம் ஆண்டு கஞ்சன் எனும் திரைப்படத்தில் எம்.என்.நம்பியார் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார். அதனைத் தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்த எம்.என்.நம்பியார். அறிஞர் அண்ணாவின் திரைக்கதையில் வெளிவந்த வேலைக்காறி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்றார். அதன் பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் தனது கவனத்தை செலுத்திய எம்.என்.நம்பியார் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வில்லன் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்தார்.
ஆம்.. அக்காலத்தின் திரையுலக சிகரங்களான எம்.ஜீ.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரின் திரைப்படங்களில் நிரந்தர வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தன்னை ரசிகர்கள் மத்தியில் வில்லனாகவே மாற்றிக்கொண்டார். இந்நிலையில் வில்லன் என்ற நிலையிலிருந்த நம்பியாரை 1980 ம் ஆண்டு காலப்பகுதிகளில் இயக்குனர் கே.பாக்கியராஜ் இவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க வைத்தார். பின்னர் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த நம்பியார். அதிலும் தனி முத்திரை பதித்தார். தமிழ் தவிர ஜங்கிள் எனும் ஆங்கிர திரைப்படத்திலும் கணவனே கண் கண்ட தெய்வம் திரைப்படத்தில் இந்திப்பதிப்பிலும் நடித்த எம்.என்.நம்பியார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் திகம்பர சாமியார் எனும் திரைப்படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதானை புரிந்தார்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக திரையுலகை ஆட்சி செய்த எம்.என்.நம்பியார் கடந்த 1946 ம் ஆண்டு ருக்மணி என்பவரை திருமணம் முடித்தார். இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் மிகப் பெரிய ஆன்மீக வாதியான எம்.என்.நம்பியார் கடந்த 65 ஆண்டுகளாக சபரி மலைக்கு செல்வதை தனது வாழ் நாள் கடமையாக தொடர்ந்தும் மேற்கொண்டார். இதேவேளை எம்.என்.நம்பியார் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தான் நடிக்கின்ற ஒவ்வொரு கதாபத்திரத்திலும் முத்திரை பதித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு உடல் நல குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி தனது 89 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்தாலும் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்கு முகவரி இட்டுத்தந்த நம்பியார் இன்றும் ஒவ்வொரு வில்லன்களுக்கும் ஆசானாக விளங்குகின்றார். சிவாஜி கணேசன் , எம். ஜி. ஆர் போன்ற திரையுலக சாம்ராஜ்யங்கள் வாழந்த காலத்தில் தன்னை அவர்களுக்கு இணையாக வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் அவர் இறுதியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சுதேசி ஆகும்…எம்.என். நம்பியார் என்ற வில்லன் கடந்த 2008, நவம்பர் 19 அன்று காலமானார். உலகை விட்டு மறைந்தாலும் தமது உள்ளங்களில் என்றும் கதாநாயகனாக எம்.என். நம்பியார்.
அட்சினல் செய்தி
எம்.என்.நம்பியார் ஷூட்டிங்கில் இருக்கும் போது, எப்போதும் அவரது மனைவி ருக்மணி தான் சமைத்து ஷூட்டிங் ஸ்பாட்க்கு எடுத்து வருவாராம். முதல் வாய் சாதத்தை மனைவிக்கு ஊட்டி விட்ட பிறகே நம்பியார் சாப்பிடுவார். திருமணம் ஆன முதல் நாள் முதலே இது வழக்கமாகி இருக்கிறது.எத்தனை பேர் அருகில் இருந்தாலும் இந்தப் பழக்கத்தை அவர் விட்டதில்லை.
…
“என் சம்சாரத்துக்கு ஊட்டறேன். அதுக்கு ஏன் வெட்கப்படனும்?” என்பாராம் அன்யோன்யமான நம்பியார்.
எம்.என்.நம்பியார் பிறந்த நாளையொட்டிய பதிவு