வா.. வேலைக்காரா பாடலில் என்ன ஸ்பெஷல்?

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான படம் ‘வேலைக்காரன். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் வெளியான ‘கருத்தவன்லாம் கலீஜா’ மற்றும் ‘இறைவா’ ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து ‘வா வேலைக்காரா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருந்தாலும் வெளிவந்துள்ள ‘வா வேலைக்காரா’ பாடலுக்கு இந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ராஜாதான் ஹீரோவாக இருக்கிறார்.

கருத்தவன்லாம் கலீஜா பாடல், உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமை பேசியது. அதேபோல் வா வேலைக்காரா பாடலிலும் உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமை பேசப்பட்டுள்ளது. கலை இயக்கம் என்பது பாடல் காட்சிகளுக்காக பிரமாண்ட கண்ணாடி அரங்குகள் அமைப்பதும், ரயில்களிலிருந்து சாலை வரை பெயின்ட் அடிப்பதும் மட்டுமே என்று நம்பப்பட்டு வந்ததை வேலைக்காரன் படக்குழு மாற்றியிருந்ததை அரங்கு ஸ்லம் செட் உருவாக்க வீடியோவில் பார்க்க முடிந்தது. அதேபோல் இந்தப் பாடலிலும் படத்தின் செட் உருவாக்கத்தில் பணிபுரிந்தவர்களின் உழைப்புக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடலில்,

உனது கை விரல்
உளிகள் ஆகுதே உலகை
செய்கிறாய் வேலைக்காரா
வலிகள் தாங்கி நீ வழிகள்
செய்கிறாய் தலைவன் நீயடா
வேலைக்காரா வேலைக்காரா   

என்ற வரிகளாகட்டும்

மே மட்டுமே உன் மாதமா… யார் சொன்னது வா வேலைக்காரா…

எந்நாளுமே உன் வியர்வையைக் கொண்டாடிடும் வா வேலைக்காரா

என்கிற வரிகளிலும்,

கண் தூங்கி விடுமா… கண்டதில்லை துளியும் ஓய்வு…

ஓடோடி உழைத்தும் நகராமல் நிற்கும் அவனின் வாழ்வு…

என்றும்

தன்னாசையில்
மண் வீசியே நம் ஆசையை
கொடி ஏற்றினான்
எதிர்காலமே நமதாகவே
புது பூமியில் குடியேற்றினான்

என்பது  போன்ற வரிகளிலும் பாடலாசிரியர் விவேக் உழைக்கும் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறார். வா வேலைக்காரா பாடலின் லிரிக்கல் வீடியோவில் இருக்கும் காட்சிகள் பாடலுக்குப் பொருந்துகின்றன. படத்தில் மோகன் ராஜா எப்படிக் காட்சிப்படுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பை இது கூட்டியுள்ளது.

வா வேலைக்காரா பாடல் வரிகள் வீடியோ