சீயான் விக்ரம் தன் மகன் துருவ் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு தற்போது நாயகி தேடி வருகிறார். அதை ஒட்டி லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை பாலா இயக்குகிறார். பெரும்பான்மை ரசிகர்கள் யூகிக்கப்பட்ட ‘சீயான்’ பெயருக்குப் பதிலாக ‘வர்மா’ எனப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நாயகி தேடும் வேலையில் இறங்கியுள்ளது படக் குழு.
இது குறித்து விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவளைக் காணவில்லை. அந்த அவள் நீங்களாக இருப்பின் அல்லது அவள் உங்களைப் போல இருப்பின் உங்கள் புகைப்படத்தையும், வீடியோவையும் [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களைச் சந்திப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வேகமாக அனுப்பி வையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவோடு சேர்த்து வீடியோ ஒன்றையும் விக்ரம் இணைத்துள்ளார். அந்த வீடியோவுக்கு ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள அதற்கு பிரதீப் ஜெனிஃபர் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். அவர்களுக்கு விக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.
நாயகி தேடும் படலத்தை `வர்மா’ படக் குழு தொடர்ந்துள்ளதால், விக்ரம் தேடும் அந்த நாயகி யார் என்பது விரைவில் தெரிந்து விடும்.