அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்போதெல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான “அறம்” திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.. சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல… என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே வந்தது இந்தத் தண்ணீர் பிரச்சனை” என்கிற ஒற்றை வசனத்தின் மூலம் தற்போதைய அரசியலை ஒரு சாமானியனின் மனநிலையைப் பிரதிபலிக்குமாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் கோபி.

மேலும் அரசியல்வாதிகளைச் சாடும் வகையில் எக்கச்சக்கமான வசனங்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நயன்தாரா ஒரு சீனில், “பணம் ரெண்டு பேரத்தான் உருவாக்கும். ஒண்ணு, அடிமைகளை உருவாக்கும். இன்னொண்ணு எஜமான்களை உருவாக்கும். ஒருபோதும் மனிதர்களை அது உருவாக்காது” என்று நயன்தாரா மூலம் யிலாக கம்யூனிச சித்தாந்தங்களைப் பேச வைத்துள்ளார் இயக்குநர்.

அதே சமயம் படம் குறித்து சில தகவல்களை சொன்ன இயக்குநர், ‘ இதில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் மதிவதனி. ஆட்சித்தலைவர் கதாபாத்திரம். இந்த கேரக்டர் ஒரு தியாகத்தை உணர்த்துவதாக இருக்கும். தியாகத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். இந்தப் பெயருக்காக மட்டும் நாங்கள் நிறைய யோசித்தோம். பிறகுதான் மதிவதனி பெயரை செலக்ட் பண்ணினோம். இந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் ஒரு தியாகத்தை செய்தவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் தியாகம் செய்த ஒரு மிகப் பெரிய தலைவரின் மனைவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். மற்றபடி இதற்குப் பின்னால் எந்தவோர் அரசியலும் கிடையாது. ஆனாலும் பொதுச் சமூகத்தால் கை விடப்பட்ட கேரக்டருக்குத்தான் இந்த உலகத்தைக் கேள்வி கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது. அதை என் சினிமா கதாபாத்திரங்கள் நிச்சயம் செய்யும். ‘அறம்’ படத்திலும் இதை எதிர்பார்க்கலாம்”.

ஆக ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும் வசனங்களும் படத்துக்கான எதிர்பார்ப்பை இப்போதே அதிகப்படுத்தியுள்ளன என்பதென்னவோ நிஜம்.

இதோ அறம் டிரைலர்: