தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்!

தமிழ் நாடகக் கலையின் தந்தை, தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 95-வது நினைவு நாள் விழா இன்று புதுவையில் அனுசரிக்கப்படுது.

இந்நிகழ்ச்சியை ஒட்டி ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சார்பாகவும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாகவும் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது சமாதிக்கு, ஏராளமானோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடந்த விழாவில் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர் , பொன்வண்ணன் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று போற்றப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள். ஏறத்தாழ 30 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாகக்கொண்டு சுமார் 63 நாடகங்களை அரங்கேற்றியவர். மிகவும் பிரபலமான கலைஞர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, டி.கே.சண்முகம் சகோதரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் இவர்தன். இவரது நாடகங்கள் நல்ல மொழி வளங்களோடு இருந்தன. எமதர்மன், சனீஸ்வரன், இராவணன், இரணியன், கடோற்கஜன் போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்த சங்கரதாஸ் சுவாமிகள், தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை கட்டிப்போட்டார். பார்ப்பவர்களை அசத்தும் திறமை பெற்ற சங்கரதாஸ் சுவாமிகள், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு நாடகங்களை எழுதி இயக்குவதோடு தன் பங்களிப்பை சுருக்கிக்கொண்டார்.

இதன் பின்னனியின் ஒரு சோக சம்பவம் இருக்கிறது. ஒருமுறை நாடகத்தில் சனீஸ்வர பகவான் வேடமேற்று நடித்தவர், நாடகம் முடிந்ததும் வேஷத்தைக் கலைக்க அந்த ஊரின் ஏரிக்கு சென்றார். அப்போது அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி, சனீஸ்வர வேடத்தில் இருந்த சங்கரதாஸ் சுவாமிகளைக் கண்டதும் பயத்தில் மயங்கிவிழுந்து அங்கேயே இறந்துவிட்டார். இந்த சம்பவம் அவரை அதிகம் பாதித்ததால் அன்றிலிருந்து வேஷமிடுவதை நிறுத்திக் கொண்டார். சோகமான சம்பவமானாலும சங்கரதாஸ் சுவாமிகளின் கதாபாத்திர பொருத்தத்துக்கு இது ஒரு முக்கிய உதாரணம்.

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம் போன்றவை அவருக்கு புகழ் தந்த நாடகங்கள். இதில் பெரும்பாலானவை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும் அந்தக் காலத்திலேயே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதிலேயே சங்கரதாஸ் சுவாமிகளின் ஆங்கிலப் புலமையையும் நாம் அறிய முடியும்.

தூத்துக்குடியை அடுத்த காட்டுநாயக்கன்பட்டியில் 1867-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள், நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னாளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரை, ஜெயராம் நாயுடு என்பவர் புதுச்சேரிக்கு அழைத்து வந்து, அவரது இறுதிக்காலம் வரை பராமரித்து வந்தார். கடந்த 1922-ம் ஆண்டு இதே நவம்பர் 13-ம் தேதி சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்தார். அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 1956-ம் ஆண்டில் தஞ்சை ராமையாதாஸ், டி.கே.சண்முகம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உதவியுடன் ஜெயராம் நாயுடு, வ.சுப்பையா ஆகியோரின் முயற்சியால் முழு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. சங்கரதாஸ் சுவாமிகள் வசித்து வந்த ஒத்தவாடை வீதி, 1969-ம் ஆண்டில் சங்கரதாஸ் வீதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.