தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். மோகன் பாபு இப்போதும் அதிகமாக நடிப்பதில்லை. எனினும் தெலுங்கு சினிமாவின் பவர் சென்டர்களில் அவரும் ஒருவர். அவரது மகள் மஞ்சு லக்ஷ்மி, மகன்கள் விஷ்ணு மஞ்சு, மஞ்சு மனோஜ் மூன்று பேரும் திரைப்படத்துறை யில் தான் இருக்கின்றனர். மஞ்சு லக்ஷ்மி மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்திருந்தார். மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடிகராக நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை.தற்போது கார்த்திக் இயக்கியுள்ள புதிய படத்தின் மூலம், தமிழிலும் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் விஷ்ணு மஞ்சு. தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.
சுரபி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஹைதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.’குறள் 388′ என்று இப்படத்துக்கு பெயரிட்டுள்ளார்கள். திருக்குறளில் 388-வது குறளில் இப்படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறது என்கிறது படக்குழு. தமிழ் பதிப்புக்கான வசனங்களை இரா.ரவிஷங்கர் எழுதியுள்ளார். இன்றைக்கு இருக்கும் தமிழக அரசியல் சூழலின் மக்களின் பிரதிபலிப்பாக இப்படம் அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். இப்படம் குறித்த அறிவிப்பை மோகன்பாபுவின் பிறந்த நாளன்று, இளையராஜா அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேலும் படம் பற்றி இயக்குநர் ஜி.எஸ்.கார்த்தி பேசும்போது, “இரு வரிகளில், ஏழு வார்த்தைகளை கொண்ட திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவுமே இல்லை.
‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.’- என்ற 388-வது குறளின் கருத்துக்கள்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.
பரபரப்பான இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக இத்திரைப்படம் உருவாகிறது. இந்த படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும். இதில் காதல், மோதல், காமெடி எல்லாமும் இருக்கு. விஜயதசமி அன்று தனது பிரவேசத்தை ஆரம்பித்திருக்கிறார் விஷ்ணு மஞ்சு. அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்..” என்றார் இயக்குநர்.