2 பாயிண்ட் ஜீரோ – படத்தை முழுமையாக 3டியில் உருவாக்க காரணம் என்ன? ஷங்கர் விளக்கம்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.0. லைகா நிறுவனம் ரூ.400 கோடி செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் உள்ள பர்ஜ் பார்க்கில் இன்று 27-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவுக்காக 12 கோடி செலவிடப்படுகிறது. விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் 125 சிம்போனி இசைக் கலைஞர்கள் பங்குபெறும் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது. அப்போது படத்தின் பாடல்களை லைவ்வாக இசைக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முந்தாநேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர்.

அங்கு நேற்று நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ரஜினி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக பர்ஜ் பார்க் நகர் முழுவதும் 2.0 நகராக மாற்றப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினருடன் துபாய் நாட்டு மன்னர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் அக்‌ஷய்குமார் பேசும்போது, ‘இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். சங்கர் ஓரு இயக்குனராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.இப்படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது” என்றார்.

ரஜினி பேசிய போது, “கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பெருமை மிக்க இந்தப் படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி. ‘2.O’ வெளியான பிறகு இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கொண்டாடப்படும்” என்றார். தொடர்ந்து பேசுகையில் அவர், “நிஜ வாழ்க்கையில் நான் நடிப்பதில்லை, ஏனென்றால் அதற்கு யாரும் காசு தருவதில்லை” என்றார்.

இயக்குநர் ஷங்கர், “இந்தப் படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சியல்ல. இது வேறு மாதிரியான திரைக்கதையுடன் புதுமையாக உலகத் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் நாம் பார்த்த ஒரு சராசரி இந்திய ஆக்‌ஷன் படமாக இது இருக்காது. உலகில் எந்த மூலையில் இருப்பவரும் இந்தக் கதையுடன் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியும். இது எந்த ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலும் அல்ல” என்றுத் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகிய நிலையில் அவரை ஒப்பந்தம் செய்வதில் ஏற்பட்ட சில தடைகளால் பிறகு அக்ஷய் குமார் நடிக்க வைக்கப்பட்டார் என்று கூறிய அவர், இந்தப் படத்தை முழுமையாக 3டியில் உருவாக்க காரணம் என்ன என்ற கேள்விக்கு, “இது தொழில்நுட்ப ஏமாற்று வேலைகளைக் கொண்டு ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் முயற்சி அல்ல. கதைக்கு மிகவும் தேவையாக இருந்ததால் 3டி தொழில்நுட்பத்தில் படத்தின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன. 2.O படத்தை 3டி தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் பார்க்கும் இந்திய ரசிகர்கள் வருங்காலங்களில் 3டி படங்களைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும்” என்றார்