என்னை ஏன் சந்தித்தார் கெஜ்ரிவால்? – கமல் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் அண்மை காலமாக ட்விட்டர் மூலம் அன்றாட அரசியல் நடப்புகள் குறித்து கமெண்ட் போடும் சில வார்த்தைகளே தமிழக ஊடகங்களின் விவாதப் பொருளாக மாறி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் பினராயி விஜயனைச் சந்தித்த கமல், அரசியல் கற்றுக்கொள்ள வந்ததாகக் கூறியதையடுத்து, கமல் மார்க்சிஸ்ட்டில் சேரப் போகிறார் என்று தகவல் வெளியாகியது. ஆனால், அதை கமல் மறுத்துவிட்டார். தொடர்ந்து கட்சி ஆரம்பிப்பது குறித்துச் சிந்தித்து வருவதாகவும் தனியார் இணையதளத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது.

அதன்படி ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்டம்பர் 21) சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் மகள் அக்ஷராஹாசன், கெஜ்ரிவாலை வரவேற்றார். பின்னர் ஆழ்வார்பேட்டை யிலுள்ள கமல்ஹாசன் இல்லத்தில் அவரை சந்தித்தார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன்பின் கமலும் கெஜ்ரிவாலும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

முதலில் பேசிய கமல்ஹாசன், “எதற்காக இந்தச் சந்திப்பு என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறும் அனைவரும் என்னைச் சந்திக்க வருகிறார்கள். ஊழலை ஒழிக்க முன்வரும் அனைவரும் எனக்கு உறவினர்களாகிவிடுகிறார்கள். கெஜ்ரிவால் என்னை வந்து சந்தித்தது எனது பாக்கியமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

அடுத்து பேசிய கெஜ்ரிவால், “நான் கமலின் நீண்டகால ரசிகன். பலருக்கும் ஊழல் மற்றும் மதவாதம் நாட்டில் உள்ளது தெரியும். ஆனால், அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சிலரே. அதில் கமல் ஒருவர். கமல் அரசியலுக்கு வர வேண்டும். நாட்டின் அரசியல் சூழ்நிலை, தமிழக சூழ்நிலைக் குறித்து ஆலோசித்தோம். வருங்காலத்திலும் ஆலோசிப்போம்” என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில், ‘ஆம் ஆத்மியில் கமல் இணையப் போகிறாரா?’ என்ற கேள்விக்கு இருவரும் பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டார்கள்

இதனிடையேஇந்தச் சந்திப்பு குறித்து நேற்று (செப்டம்பர் 21) தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தாலும் சரி; அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையே சந்தித்தாலும் சரி. எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” எனக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.