‘நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன்.?’ – ராகவா லாரன்ஸ் டென்ஷன்!

நடிகர் ராகவா லாரன்ஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது தாயுடன் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து, ராகவா லாரன்ஸ் கோவில் வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வின் கொடுமையால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் ஈடு செய்ய முடியாதது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை பாஜக விமர்சித்து வருகிறது. பாஜகவுக்கு காலம் பதில் சொல்லும். இவ்வாறு அவர் பேசினார் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில், .” நேற்று எனது முனி 4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன்..தரிசனம் முடித்து வரும் போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள்  சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள்..
கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன்..

இதை அடுத்து நீட் விவகாரம் பற்றி கேட்டார்கள் … நானும் ” காலம் பதில் சொல்லும் ” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன்..ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள்..சேவையும் ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம்.. அரசியல் அல்ல..அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி பெயரை குறிப்பிடுவேன் ……அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா ? என்றும் கேட்டார்கள்..
அது கடவுளுக்கும் எனக்கும் அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும் என்று சொன்னேன்.தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்”இவ்வாறு ராகவாலாரன்ஸ் தனது செய்தி குறிப்பில் கூறி இருக்கிறார்