கவுதம் மேனன் தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ -என்னும் புதிய இணையத் தொடர்!

‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் கவுதம் மேனன். ‘அச்சம் என்பது மடமையடா”,’நெஞ்சம் மறப்பதில்லை’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார். தள்ளிபோகாதே’ பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது ‘ஒன்றாக என்டர்டைன்மெண்ட்’ யு டியூப் சேனல்.

அந்நிறுவனத்தின் யூ-டியூப் சேனலில் ’உரையாடல் அண்ட் ஸ்டஃப்’ என்ற பெயரில் பிரபலங்களை கவுதம் மேனன் எடுத்த வீடியோ பேட்டிகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதுள்ள கால மாற்றத்துக்கு ஏற்றவாறு, புதிதாக இணையத் தொடர் ஒன்றை தயாரித்துள்ளார் கவுதம் மேனன்.

‘வீக் எண்ட் மச்சான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் முழுக்க இளைஞர்களை மையம் கொண்டே உருவாக்கியுள்ளனர். வார கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக வாழும் கல்யாணமாகாத நான்கு இளைஞர்கள் போடும் காமெடி திட்டங்களே இத்தொடரின் கதையாகும்.

இன்றைய இளைஞர்களின் வார கடைசிக்கான வெற்றிகரமாகும் திட்டங்கள், திட்டமிடாத அவர்களது திட்டங்கள், நடைபெறாத அவர்களது திட்டங்கள், திங்களன்று நடந்ததை மறந்தே போகும் மறையும் திட்டங்கள், திட்டங்கள் எப்படி போனாலும் கவலைப்படாமல் அடுத்த வாரத்திற்கு மறுபடியும் திட்டமிடுதல் போன்ற அனைத்தும் அம்சங்களும் இந்த இணையத் தொடரில் காமெடியாக சொல்லப்பட்டுள்ளது.

இத்தொடரை ஷமீர் சுல்தான் இயக்கியுள்ளார். மதன் குணதேவா ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் தொடரின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.