தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏ.பி.நாகராஜன்!

0
442
“கடைசிக் குடிமகனிலிருந்து உலககைக் காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” – இப்படிச் சொன்னவர் பரமசிவனின் மனைவி பார்வதி. அவரை இப்படி பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன்.
“ஒருத்தி என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்கமாட்டேங்குறா.. இன்னொருத்தி என் உடம்புல பாதியை எடுத்துக்கிட்டு பிராணனை வாங்குறா” என்று இருதார மணவாளரான பரமசிவனை புலம்பவைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான். இரண்டும் திருவிளையாடல் படத்தில் அவர் எழுதிய வசனங்கள்.
கொங்கு மண்டலத்தில் வளமான நிலவுடைமையாளர் குடும்பத்தில் 1928 இதே பிப்ரவரி 24ந் தேதி பிறந்தவர் அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் (ஏ.பி.நாகராஜன்). அவருக்கு வைக்கப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது. அவ்வை டி.கே.சண்முகம்  நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கே நிறைய குப்புசாமிகள் இருந்ததால், அவரது பெயர் நாகராஜன் என மாற்றப்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து ஊர் ஊராகச் சென்று நாடகங்களில் நடித்தார் நாகராஜன். ஸ்த்ரீபார்ட் எனப்படும் பெண் வேடங்களில் நடித்தார். சக்தி நாடகசபாவில் அவர் சேர்ந்தபோது நடிகர்திலகம் சிவாஜிகணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நண்பரானார்கள். பின்னர், பழனி கதிரவன் நாடக சபா என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றியதுடன் ராணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் நாகராஜன்.
அவர் எழுதி அரங்கேற்றிய ‘நால்வர்’ என்ற நாடகம் 1953ல் திரைப்படமானது. அவரே திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்தார். படம் வெளியானபின் அவரை ஒரு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் தன் அப்பா பற்றியும் சொந்த ஊரான அக்கம்மாபேட்டை பற்றியும் தெரிவித்திருந்ததைப் படித்த அவரது சொந்தபந்தங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்தனர்.
மாங்கல்யம், நல்லதங்காள் உள்ளிட்ட படங்களிலும் ஏ.பி.நாகராஜன் நடித்துவந்தார். எனினும், நடிப்பைவிட படைப்பில்தான் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தது. மேடை நாடகத் தமிழில் திரைப்பட வசனங்கள் அமைந்திருந்த காலத்தில், கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் வசனம் எழுதினார் ஏ.பி.என். ‘நான் பெற்ற செல்வம்’ படத்திலும் அவரது படைப்பாற்றல் வெளிப்பட்டது.
தமிழில் வெளியான மிக நீளமான படங்களில் ஒன்று, ‘சம்பூர்ண ராமாயணம்’. 1958ல் வெளியான இப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். ராமராக என்.டி.ராமராவும், பரதனாக சிவாஜியும், ராவணனாக டி.கே.பகவதியும் நடித்த படம் இது. ராமன்தான் கதாநாயகன் என்றாலும் ராவணனின் பெருமைகளைச் சொல்ல ஏ.பி.என் தவறவில்லை. அவன் திறமையான மன்னன் மட்டுமல்ல, சிறந்த வீணைக் கலைஞன் என்பதையும் அவனது அவையில் ராகங்களைப் பற்றி அலசும் அருமையான பாடல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ராவணனுக்கு 10 தலைகளை ஒட்டவைத்து அரக்கனாகக் காட்டாமல், நம்மைப்போல ஒற்றைத்தலையுடன் ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ உலவவிட்டிருந்தனர். இந்தப் படம் பெற்ற வெற்றியும், அதற்கு மூதறிஞர் ராஜாஜி அளித்த பாராட்டும் ஏ.பி.நாகராஜனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான முதல் படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’ (1962)
ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குநரைப் பார்த்து தமிழ்த்திரையுலகமும் ரசிகர்களும் முதன் முதலாக வியந்தது, ‘நவராத்திரி’ படத்தில்தான் (1964). ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த அப்படம் பெரும் வெற்றி பெற்றது. 1965ல் ‘திருவிளையாடல்’ படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களின் நாவிலும் அழகுத் தமிழ் விளையாடியது. ஒரு புராணப் படத்தில் அமைந்த நகைச்சுவை காட்சி, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைக்கிறது என்றால் அது திருவிளையாடல் படத்தில், தருமி வேடத்தில் நடித்த நாகேஷின் அற்புதமான உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை காட்சிதான். கடவுளான பரமசிவனையே கலாய்த்துத் தள்ளியிருப்பார் தருமி.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்திரையில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வந்த காலத்தில் அதற்கு நேர்எதிராக புராணப் பாத்திரங்கள் மூலம் ‘தெய்வ’ங்களைத் தமிழ்ப பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். அவர், திராவிட இயக்கத்திற்கு எதிராக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் இணைந்திருந்தார். அதனால், அவருடைய படைப்புகளிலும் அது வெளிப்பட்டது. தி.மு.கவில் மு.கருணாநிதியை கலைஞர் என்று அழைத்ததுபோல தமிழரசு கழகத்தில் ஏ.பி.நாகராஜனை ‘கலைஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தனர். அங்கே ‘கவிஞர்’ கண்ணதாசன், இங்கே ‘கவிஞர்’ கா.மு.ஷெரீப். இரண்டு இயக்கத்திற்குமான போட்டியில், திரையில் செம்மையாக ஒளிர்ந்தது, தமிழ்.
திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புராண படங்களை எடுத்தார் ஏ.பி.நாகராஜன். எல்லாவற்றிலும் அவருடைய தமிழ் விளையாடியது. அவருடைய மிகச்சிறந்த படைப்புகளின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது, ‘தில்லானா மோகனாம்பாள்’. இது புராணமல்ல, புதினம். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையைத் திரைக்கு ஏற்றபடி நாகராஜன் வடிவமைக்க, நாதசுர கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டியிருந்த படம் அது. கலைஞர்களின் வாழ்வை மிகச் சிறப்பான காட்சியமைப்புகள் மூலமாக வெளிப்படுத்திய தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா, மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்கினைத் திறம்பட வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர். சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் தில்லானா மோகனாம்பாள் பெற்றது.
பிற்காலச் சோழ மன்னர்களில் பெரும்புகழ் பெற்றவரான முதலாம் ராஜராஜனின் வரலாற்றை, தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ என்ற பெயரில் இயக்கியவரும் ஏ.பி.நாகராஜன்தான். குருதட்சணை, வா ராஜா வா, குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருமகள் போன்ற படங்களையும் இயக்கினார்.
நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பலப்பல படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’ அதுவே ஏ.பி.என்னின் கடைசிப்படமாகவும் அமைந்தது. 1977ல் அவர் காலமானார். இன்றும் கோவில் திருவிழாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒ(லி)ளிபரப்பாகும் திருவிளையாடல் படத்தின் வசனங்களில் உரக்க ஒலிக்கும் தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஏ.பி.நாகராஜன்.
-கோவி.லெனின்.
இன்று பிப் 24 -ஏபி நாகராஜன் பிறந்த நாள்