இந்த ஆகஸ்ட் 11-ம் தேதி `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `தப்பு தண்டா’, `மாயவன்’, `குரங்கு பொம்மை’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்க பட்டுள்ளது. அதே போல் ஜோதிகாவின் `மகளிர் மட்டும்’, சிபிராஜின் `சத்யா’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று செய்திகள் வந்தாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாக வில்லை. இந்த ஆகஸ்ட் 11 ரேசில் இந்த ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படமும் இணைந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக திரைய ரங்குகளை விஐபி 2 கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மலேசியாவிலும் `வேலை யில்லா பட்டதாரி-2′ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்திருக்கிறது. மலேசியாவில் மட்டும் 108 திரையரங்குகளில் 550 திரைகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மலேசியாவில் வேறு எந்த நடிகரின் படத்துக்கும் இவ்வுளவு திரைகள் கிடைத்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மலேசியாவிலும் தனுஷ் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இப்பட புரொமோஷனுக்காக நடிகர் தனுஷ் மும்பை போன போது அங்குள்ள பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, “‘ரஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களின் புரோமோஷனுக்காக நான் இதற்கு முன்னர் மும்பை வந்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை வசூல் ரீதியான ஒரு படத்தின் வெற்றி மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். ஒரு படத்தின் தோல்வி என்னை பாதித்ததில்லை என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை. ‘ஷமிதாப்’ படம் சரியாக ஓடாதது என்னை காயப்படுத்தியது. அந்தப் படத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். அதே படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விரும்புகிறேன்.
ஒரு நடிகன் என்ற முறையில் எல்லா முடிவுகளையும் சரியாக தேர்வு செய்தால் அந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிப் படமாக அமையும். ‘ஷமிதாப்’ படமும் அப்படித்தான். ஆனால், நமது முடிவுகளின் வெளிப்பாடு சில நேரங்களில் சரியாக அமையும், அமையாமலும் போகும். அந்த வகையில் ‘ஷமிதாப்’ மிக உயர்ந்தப் படம். அது சரியாக ஓடாதது என்னை காயப்படுத்தியது.
திரைப்பட உலகை பொறுத்தவரை போட்டி முக்கியம் என்று நான் நினைப்பதில்லை. அதில் அர்த்தமே இல்லை. போட்டி என்றால் அதற்கான காரணம் ஒன்றிருக்க வேண்டும். சினிமாத்துறை யில் நமது படங்கள் வெற்றி பெற்றால் நாம் அனைவருமே வெற்றியா ளர்கள்தான்.முந்தையப் படத்தைவிட அடுத்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும். என் படத்தை பார்க்கவரும் ரசிகர்களுக்கு சிறந்ததை தரவேண்டும் என்பதால் நான் என்னோடு மட்டுமே போட்டிப் போடுகிறேன்.
மிகவும் பாதுகாப்பான நடிகனாக என் வேலையில் நான் மகிழ்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன். நாளை எனக்கு வேலை இருக்குமா? இருக்காதா? என்பது பற்றி எதுவும் நினைப்பதில்லை. எனக்கென்று வாய்க்கப்பெற்றது நிச்சயமாக எனக்கு கிடைக்கும். கடவுள் அதை கூட்டியோ, குறைத்தோ கொடுக்கப் போவதில்லை. ஆறடி நிலத்துக்கு அடியில் என்னைப் புதைக்கும்போது எதையுமே நான் கொண்டுப் போகப் போவதில்லை” என்று தெரிவித்திருந்தார்
இதனிடையே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் வி ஐ பி 2 படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.இப்படத்தில் கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.