1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது சம்ஸ்கிருத கவிஞர் காளிதாசாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் பி.ஜி.வெங்கடேசன் முக்கிய வேடத்திலும், டி.பி.ராஜலக்ஷ்மி முக்கிய பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எல்.வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், டி.சுஷீலா தேவி, ஜே.சுஷீலா மற்றும் எம்.எஸ்.சந்தானலட்சுமி ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம்தான் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.
அதுவரை ஊமைப்படம் என்று சொல்லப்பட்ட மவுனப்படங்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திரையில் பேசும் பாத்திரங்களைக் கண்டதுமே, படத்திலிருந்த சிறுசிறு குறைகளையும் தாண்டி கொண்டாடித் தள்ளிவிட்டார்கள்.
இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ (1931) தயாரித்த இம்பீரியல் மூவிடோன் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. எட்டு நாட்களில் தயாரான இந்தப் படத்தின் அந்நாளைய பட்ஜெட் ரூ.8,000. அதுவே அப்போது பிரும்மாண்ட தயாரிப்புதான்.
இந்த படம் “தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களுடன் நகரத்தில் திரையிடப்பட்ட முதல் டாக்கி” என்று அறிவிக்கப்பட்டது. காளிதாஸ் முதன்முதலில் மெட்ராஸ் சார்ந்த தியேட்டரில் கினிமா சென்ட்ரலில் (பின்னாளில் முருகன் தியேட்டர் என்று அழைக்கப்படுகிறது) அக்டோபர் 31, 1931 அன்று தீபாவளியின் பண்டிகை நிகழ்வின் போது திரையரங்கில் வெளியிடப்பட்டது அக்காலத்தில் இப்படம் ஒத்துழையாமை இயக்கத்துடன் ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காளிதாஸ் படத்தின் நீளம் சுமார் 6000அடி. காளிதாஸ் திரைப்படத்தில் “விடா போன்” முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப் படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப் பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்படுமாக்கும்.
இப்படத்தின் ஃபிலிம் ரீல்கள் மெட்ராஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, ஆயிரக் கணக்கான மக்கள் நகரின் மத்திய ரயில் நிலையத்தில் கூடி, வால் டேக்ஸ் சாலையில் ரீல் பெட்டியைப் பின்தொடர்ந்து, ரோஜா இதழ்களை எறிந்து, தேங்காய்களை உடைத்து, சூடம் எரித்து வரவேற்றார்கள். . அத்துடன் இதன் ரிலீஸூக்கு மெட்ராஸில் இருந்த பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தியேட்டர்களுக்கு வெளியே சுமார் 4-5 கி.மீ தூரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போதே ஒரு சினிமாவுக்கு இப்படி ஒரு வரவேற்பு அளித்த மக்கள் பின்னாளில் சினிமா ஆளுமைகளையே தங்களை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்தார்கள் என்பது கண்கூடு