ஹாட் டாபிக்காகி போன ‘தரமணி’ படத்தைத் தொடர்ந்து ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, ‘தங்க மீன்கள்’ சாதனா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பேரன்பு’. இதன் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் பின்னணி இசைக் கோர்வையில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
“இன்னும் இருபது நாட்களுக்குள் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக படம் திரையிடப்படும். ஆனால் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தான் திரைக்கு வரும்” என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகியுள்ள இதில் சமுத்திரகனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, சூரஜ், சித்திக், ஷரத் குமார், மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் திருநங்கை ஒருவரும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தரமணி படத்தில் ராமுடன் இணைந்து பணியாற்றிய தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ராம் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘தங்க மீன்கள்’ அப்பா, மகளுக்கான உறவை படம்பிடித்துக் காட்டி ரசிகர்கள் அனைவரையும் உருகவைத்த நிலையில், ‘பேரன்பு’ படத்தில் அதற்கும் ஒருபடி மேலேபோய், அனைவரையும் கலங்கடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், ‘பேரன்பு’ திரைப்படத்தை இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனியாகத் திரையிட்டுக் காட்டியதாகவும், பல காட்சிகளில் மம்முட்டியின் நடிப்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன பாரதிராஜா, இயக்குநர் ராமை வெகுவாகப் பாராட்டியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.