மாயவன் இயக்குநர் ஆனது ஏன்? – சி.வி.குமார் விளக்கம்

மாநகரம் கதாநாயகன் சந்தீப், லாவன்யா திரிபாதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயவன்’. இப்படத்தை பீட்சா, சூது கவ்வும், அட்ட கத்தி ஆகிய படங்களை தயாரித்த சி.வி.குமார் முதல் முறையாக இயக்கி உள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது.  படம் பற்றி சி.வி.குமார் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, “சினிமா தொழில் உள்ள அனைவரும் ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறுவார்கள். 18 படங்களை தயாரித்த அனுபவம் இருப்பதாலும், கல்லூரி மற்றும் வேலை செய்தபோது ஏற்பட்ட சினிமா தொடர்பான அனுபவங்களாலும் இந்த படத்தை இயக்க முன்வந்தேன்.

முதலில் கதையை தயார் செய்தவுடன் நலன் குமாரசாமியுடன் கூறினேன். அவர்தான் திரைக்கதை இயக்கி தருவதாக கூறி நீங்களே இயக்குங்கள் என்று சொன்னார். இப்படித்தான் மாயவன் உருவானது.  வெளிநாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை எழுதியுள்ளேன்.

இது ஒரு புதிர் த்ரில்லர் படம். தொடர்ந்து கொலைகள் நடக்கிறது. யார் செய்கிறார் என்பது கதை. சந்தீப் போலீஸ் அதிகாரியாகவும், லாவன்யா மனநல மருத்துவராகவும் நடித்துள்ளார். சில்வா, மைம்கோபி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெரப் என படத்தில் 4 வில்லன்கள் நடித்துள்ளனர். ஜாக்கி ஷெரப் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருப்பது மிகவும் சவாலாக இருந்தது. எப்படி தயாரிப்பாளராக நல்ல கதைகளை தேர்வு செய்தனர். அதேபோல் இயக்குனராகவும் நல்ல கதைகளை இயக்குவேன். படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகிறது” என்றார்