லண்டனில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

0
400

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘நேற்று இன்று நாளை’ இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால் அதிருப்தியுற்ற இந்தி பேசும் ரசிகர்கள் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் பல நட்சத்திரங்களும், ரசிகர்களும் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை பற்றி ஐஐஎஃப்ஏ (IIFA) நிகழ்ச்சியில் ரஹ்மானிடம் கேட்கப்பட்டது.

அவர் பதிலளிக்கையில், “இவ்வளவு வருடங்களாக மக்கள் எனக்கு தந்து வரும் ஆதரவு எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களின்றி நான் இல்லை. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். லண்டன் நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், நாங்கள் எங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தோம். , நேர்மையாக இருக்கிறோம்” என்றார்.

அதேநேரத்தில், அமெரிக்காவில் மெட்லைஃப் மைதானத்தில் நடந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை தந்தனர். ஊர்வசி ஊர்வசி பாடலை தமிழில் பாடச் சொல்லியும் பலர் அவரைக் கேட்டனர். 2 மணி நேரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், இது குறித்து ரஹ்மான் சகோதரி ரெஹானா கூறுகையில், ” நீங்கள் நினைப்பது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை. ட்விட்டரில் தான் இதை சர்ச்சையாக்கி வருகின்றனர். அப்படி எதுவும் நடந்திருந்தால் தான் கண்டுபிடித்து இருப்பேன். ஏனெனில் நிகழ்ச்சியின் போது நான் ரசிகர்களை தொடர்ந்து கவனிப்பேன். எனக்கு தெரிந்து ஒரு குழு எழுந்து ‘ஹம்ம ஹம்மா’ பாடலுக்கு ஆட்டம் போட்டதை மட்டும் தான் நான் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நிகழ்ச்சியை புறக்கணித்து யாரும் வெளியேறிவிடவில்லை. இவர்கள் கூறுவது போல் நிகழ்ச்சியை பார்க்க வந்த 10,000 பேரில் 10 பேர் மட்டும் வெளியேறினால் தங்களுக்கு எப்படித் தெரியும். அப்படி ஒன்று நடந்ததா? அல்லது பொய் கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் கூறுவது படியே 10 பேர் வெளியேறினாலும், அவர்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்  கொள்வதற்கு கூட சென்றிருக்கலாம். உண்மையை கூற வேண்டுமென்றால், நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்றுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் தலைப்பு மிகத் தெளிவாக உள்ளது. அப்படி என்றால் தமிழர்கள் கூட ஹிந்தி பாடல்கள் பாடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கலாம். இதுபோன்று சர்ச்சைகளை ஏன் உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அங்கு வந்த யாரும் எதுவும் செய்யவில்லை. இதன்மூலம் ஏதோ புது சர்ச்சையை உருவாக்க நினைக்கிறார்கள். அங்கு நடைபெறாத ஒன்றை நடப்பதாக கற்பனை செய்து கூறுகிறார்கள்” என்று ரெஹானா தெரிவித்தார்.