ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்றும் ஆயுதம்!

0
382

மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகி றார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களும் உண்டுதான் . ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். ஆனால்’இந்த மாதிரி பொண்டாட்டியெல்லாம் படத்துல மட்டுந்தான் சார் கிடைப்பாங்க’ என்று ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படம்.

ரகுவரனின் சட்டையைப்பிடித்து அவரது மனைவி ஷாலினி குடிக்கலல்ல அப்பறம் என்ன ஊது என சொல்வது, பலருக்கும் கல்யாண வீடியோவை சிடி-யில் போட்டு பார்ப்பதுபோன்ற ஒரு செயல்போல இருக்கும். காதலிக்கும்போது அவர்களாகவே வாங்கிக்கொடுத்துக் குடிக்கச் சொன்னாலும், திருமணத்துக்குப் பிறகு அதைத் தொடரக்கூடாது என்பது பொது விதி. இது தெரியாமல் அடிவாங்கும் ரகுவரனுக்கெல்லாம் நாம் பரிதாபப்படத் தேவையில்லை.

பல கணவன் மனைவிகளும் வீட்டில் எதிர்கொள்ளும் விஷயங்களையே திரைப்படத்தில் வைத்து, ஒரு படம் என்பதைத்தாண்டி ரசிகர்களுடன் தங்களது படைப்பை நெருங்கவைப்பது ஒரு திரைப்படத்துக்கு மிகவும் நெருக்கமானது. ராக்கெட் செய்து விண்ணில் பாய்ச்சினாலும் சரி, வீட்டில் சுவிட்சு போர்டு சரியில்லையென்றால் அந்தக் கணவனுக்கு ரகுவரன் நிலைதான் வரும். ஒரு டையை ஒழுங்கா கட்டத் தெரியல எனக் கழுத்தை இறுக்கி டை அமுக்குவதி லிருந்து, அதான் கார் வாங்கியாச்சுல்ல. அப்பறம் எதுக்கு இந்த டப்பா வண்டியைக் கட்டிட்டு அழுவுறீங்க? எனப் பேசுவது வரைக்கும் ஷாலினி சொல்வதையெல்லாம் ரகுவரன் கேட்க வேண்டும். அதாவது கேட்டுக்கொள்ள மட்டும் வேண்டும். இதையெல்லாம் ரகுவரன் செய்தால் என்னவாகும் என்பது படத்தில் இருக்கும் ரகளைகள்.

ஷாலினி கேரக்டர், ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாற்ற ஒரு ஆயுதம். எப்போதுமே அதிகமாக ஒருவரை அடித்தால், அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகும். அதனால்தான் ஹீரோக்களில்கூட இல்லாத சமரசம் அதிகமாக அடிவாங்கும் நகைச்சுவை நடிகர்களுக்குக் கிடைத்து பொதுவான ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதேபோல, ரகுவரனை ரசிகர்களுக்கு நெருக்கமாக மாற்றுவதற்காகவே அவரது சக்திக்கு மீறியவற்றை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தும்படி ஷாலினி கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு ஒரு மாசத்துல எனக்கு ஆப்பிள் வேண்டும்டா என ஷாலினி கேட்க, ஆப்பிளுக்கு ஏன் ஒரு மாசம். வீட்டுக்குவா நிறைய வெச்சிருக்கேன் என ரகுவரன் சொல்லும்போது ஆப்பிள் மொபைல் ஃபோன் கேட்டேன்டா என அதிர்ச்சி கொடுப்பார்கள். இது பலர் நிஜ உலகத்தில் எதிர்கொள்ளும் ஒரு சம்பவம். இதுபோல கேட்பவர்கள் ஆண்களிலும் இருக்கிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படி ஒரு மனைவியை ரகுவரன் எப்படி எதிர்கொள்ளப்போகிறான்? என்பதை மட்டும் வேலையில்லா பட்டதாரி பேசாமல், அதற்குள் மிதமிஞ்சியிருக்கும் காதல், பரிவு, பாசம் என ஷாலினியின் கேரக்டருக்கு அதிக பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார்.

ரகுவரன் தன் தாயுடன் நடத்திய நாடகம், தந்தையுடன் நடத்திய சண்டை ஆகிய இரண்டையும் அந்தக் கேரக்டர்களிலிருந்து ஷாலினிக்குள் மாற்றியிருக்கிறார்கள். தாய் இல்லாததால் மனம் மாறிய தந்தை கைவிட்ட கோபமும், அந்தத் தாய் காட்டிய பாசத்தையும் வேலையில்லா பட்டதாரி 2-வில் ஷாலினி வெளிப்படுத்துவார். என்ன, அதோடு கொஞ்சம் ரகளைகளும் சேர்ந்திருக்கும்.

ஷாலினி கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால்தான், இசை வெளியீட்டு விழாவில் வேலையில்லா பட்டதாரி 3 படத்துல என்னைக் கொன்னுடாதீங்க. நான் நல்ல பொண்ணா இருப்பேன் எனச் சொல்லியிருந்தார் அமலா பால். பல விளக்கங்களைக் கேட்டு, பலமுறை ஷூட்டிங் நடத்தப்பட்டு நடித்த நடிகைக்கே, அந்த கேரக்டர் அவ்வளவு பிடிக்கிறதென்றால், தியேட்டரில் பார்க்கப்போகும் ரசிகர்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? என்பதை அறிய வேலையில்லா பட்டதாரி 2 ரிலீஸாகும் ஜூலை 28 வரை காத்திருக்கவேண்டும்.