இதுவொரு ஒரு ‘கர்மிக் திரில்லர்’ – கட்டம் படம் குறித்து ஷிவதா நாயர்!

‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்தியாசமான கதைகளை தேடிப் பிடித்து நடிக்கும் இவரது அடுத்த படம் ‘கட்டம்’. இந்தப் படத்தில் புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் ஆகியோர் ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ‘i create wonder films’ சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

kattam movie stills

‘கட்டம்’ படம் குறித்து ஷிவதா நாயர் பேசுகையில், ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ராஜன் மாதவ் என்னிடம் முழுவதும் சொன்னபோது, அது என்னை பெரியளவில் கவர்ந்தது. நான் உடனே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு புத்தம் புது கதைக் களமாகவும், புது வகை சினிமாகவும் இருந்தது. இதுவொரு ஒரு ‘கர்மிக் திரில்லர்’ திரைப்படம். ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவகையான சினிமா. இந்தப் படத்தின் கதையும், திரைக்கதை பின்னப்பட்டுள்ள விதமும், எதிர்பாராத அதிரடி திருப்பங்களும் ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே வைத்திருக்கும்.

சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, எதிர்பாராத நேரத்தில், முற்றிலும் எதிர்பாராதவகையில் அவன் விதியெனும் ‘கர்மா’வால் பழிவாங்கப்படுவதே ‘கர்மிக் திரில்லர்’. இதுவே ‘கட்டம்’ படத்தின் கதைக் கரு.

shivada nair

இந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு பல பரிமாணங்கள் உள்ளன. எனக்கு அது  சவாலாகவும், எனது நடிப்பிற்கு பெரும் தீனியாகவும் இருந்தது. இந்த கதாபாத்திரம் செய்ததின் மூலம் நடிப்பில் நான் நிறையவே கற்றுக் கொண்டேன் என்றுதான் கூற வேண்டும்.

படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களை அவ்வளவு நேர்த்தியாகவும் தெளிவாகவும் வடிவமைத்துள்ளார் இயக்குநர். படப்பிடிப்பின்பொழுது, எங்களது நடிப்பை மெருகேற்ற, இயக்குநர் எனக்கும் மற்ற சக நடிகர்களுக்கும் கொடுத்த சுதந்திரம் மிக முக்கிய பங்கு வகித்தது.

எங்களது ‘கட்டம்’ அணி ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து உழைத்தது. இந்த சவாலான கதையை திறம்பட கொண்டுவர எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்தனர்.

என்னுடன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களது உழைப்பும் நடிப்பும் பேசப்படும். நான் பெரிதும் எதிர்பாக்கும்  ‘கட்டம்’ எனது சினிமா வாழ்வில் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும்…” என்றார் மகிழ்ச்சியோடு..!