தமிழகத் தோல் இசைக் கருவிகளில் மிக முக்கியமானது பறை. பறை ஆட்டம், தப்பாட்டம் என இரு பெயர் தாங்கிய பறை இசை, வடிவ மாற்றங்களால் உரு மாறினாலும் சங்க காலம் முதல் சம காலம் வரை அழிவின்றி அதிரோசை எழுப்பிக்கொண்டிருக்கிறது. தப்பு என்ற இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஆடப்படும் ஆட்டம் என்பதால், தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கலையைப் ‘பறையாட்டம்’ என்றும் அழைக்கிறார்கள். ‘பறை’ என்ற இசைக் கருவியைத்தான் ‘தப்பு’ என்றார்கள். இதை மாட்டுத்தோலில் செய்கிறார்கள். மரக் கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவ சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை ஒட்டி பறை செய்யப்படுகிறது. இவ்வாறு ஒட்டு வதற்குப் புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பசையைப் பயன்படுத்துகி றார்கள். இந்தக் கலையை நடத்துகிறவர்களே பறையைத் தயார் செய்து கொள்கிறார்கள்.
பறையை அடிப்பதற்கு மூங்கில் குச்சியைப் பயன்படுத்துகிறார்கள். இதைச் சிம்புகுச்சி அல்லது சிம்படி குச்சி என்று அழைக்கிறார்கள். தப்பு அடிக்கும் கலைஞர்கள் இந்தக் குச்சியை இடது கையில் வைத்திருப்பார்கள். பூவரசு கம்பில் செதுக்கப்பட்ட அரை அடி நீளங்கொண்ட குச்சியை வலது கையில் வைத்தி ருப்பார்கள். இதை அடிக்குச்சி அல்லது உருட்டுகுச்சி என்பர். கைகளில் வைத்திருக்கும் இரு குச்சிகளையும் பறையில் அடித்து ஆடுகிறார்கள். தற்போது தமிழகத்தில் கோவில் விழாக்களின் போதும், பல்வேறு சடங்குகளிலும், அரசியல் நிகழ்ச்சிகளிலும் தப்பாட்டத்தை நடத்தும் வழக்கம் உள்ளது. முக்கிய கிராமியக்கலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இந்த தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.
இப்படத்திற்கு இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா
விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.