தமிழில் பல படங்களில் அம்மாவாக நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கினார். இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘ஹெளஸ் ஓனர்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். தமிழ் பெயர், வரிவிலக்கு மாதிரியான பஞ்சாயத்து எல்லாம் இனிமே கிடையாது என்பதால் இப்படி ஆங்கிலத்துக்கு மாறிவிட்டாராம்.அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ” ஹௌஸ் ஓனர்” ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறினார்.
அவரிடம் மேலும் படம் பற்றி கேட்ட போது” நான் முதலில் சென்னையை பாதித்த வெள்ளத்தை பற்றிய படம் தான் செய்ய வேண்டும் என்று இருந்தேன். என் மகளுக்கு இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததால் ,குறிப்பிடப் பட்ட அந்த படத்தை அவளது திருமணத்துக்கு பிறகு செய்யலாம் என்று விட்டு விட்டேன். இந்த நேரத்தில் சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு ஹிந்தி திரைப் படம் பார்க்க நேரிட்டது. அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை.
ஆனால் அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான , அன்பான இளைய தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்ல போகிறேன்.ஒளிப்பதிவாளர் ஜோனான் டி ஜான் ஒளிப்பதிவு செய்ய, அசோக் செல்வன் ஐஸ்வர்யா ராஜேஷ் என்கிற திறமையான கலைஞர்கள் நாயகன் நாயகியாக நடிக்க இருக்கும் ” ஹௌஸ் ஓனர்,” விரைவில் துவங்க உள்ளது” என்றார்.