நடிகை பாவனா கடத்தல் விவகாரம் ; நடிகர் திலீப் கைது! காவ்யா மாதுவன் தலைமறைவு

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை கொச்சி அருகே ஒரு கும்பல் கடத்தியது. அவரை சுமார் 4 மணி நேரம் பாலியல்ரீ ந்தட்யிக்ர் திலீப்  துன் புறுத்திய அந்த கும்பல் அதனை வீடியோவில் பதிவு செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில், பாவனாவின் கார் ஓட்டுநர் மார்ட்டின் அந்தோனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பல்சர் சுனில் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் ரூ.50 லட்சத்துக்காக பாவனாவை கடத்தியதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் நடிகை பாவனா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் திலீப் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை திரும்பியது. தொடர்ந்து அவரிடம் விசாரித்து அவர்தான் இப்பிரச்னைக்கு காரணம் என்பதை உறுதிப்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் திலீப்புக்கு எதிராக  போலீசார் 19  முக்கிய ஆதாரங்களை கண்டு பிடித்து உள்ளனர். இந்த வழக்கில்  முதல் குற்றவாளியாக பல்சர் சுனிலும் 2 வது குற்றவாளியாக நடிகர் திலிப்பும்  சேர்க்கப்பட்டு உள்ளனர்.முதல் குற்றவாளி சுனிலுக்கு நடிகர் திலீப் இந்த குற்ற செயலுக்கு ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார்.திலீபுக்கு  எதிராக சதி மற்றும் கற்பழிப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.

திலீப் இன்று அங்கமாலியில் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.பின்னர் அவரின் சொந்த ஊரான ஆலுவாவில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.பலத்த போலீஸ் காவலுக்கு மத்தியில் திலீப், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாஜிஸ்திரேட்டின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே விசாரணைகள் முடிந்தபிறகு, மாஜிஸ்திரேட் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது மாஜிஸ்திரேட்டின் இல்லத்துக்கு வெளியேயும், ஆலுவா சிறைக்கு வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திலீப்புக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது ”வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்” (திலீப் நடித்த பிரபலத் திரைப்படத்தின் பெயர்) என்று முழக்கமிட்டனர்.

திலீப் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், ஐபிசி 120பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடத்தல் பின்னணி

கடந்த 1998-ம் ஆண்டில் நடிகை மஞ்சு வாரியரை, திலீப் திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2014-ல் விவாகரத்து பெற்றனர். பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் நடிகை காவ்யா மாதவனை, திலீப் திருமணம் செய்தார். படப்பிடிப்புகள், விருது விழாக்களில் திலீப்பும் காவ்யா மாதவனும் நெருங்கிப் பழகியதை மஞ்சுவாரியரிடம் சொல்லி அவர்களின் பிரிவுக்கு பாவனா காரண மாக இருந்தார் என்று கூறப்படுகிறது. அதற்கு பழிவாங்கவே நடிகர் திலீப் உத்தரவின்பேரில் பாவனா கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியபோது, “நடிகை பாவனாவுக்கும் தயாரிப்பாளர் நவீனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் முடிவு செய்திருந்தனர். இதை தடுக்க பாவனாவை கடத்தி படம் பிடித்து அந்த படத்தை நவீனுக்கு அனுப்ப சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது” என்று தெரிவித்தன.

இந்த குற்றச்சாட்டுகளை நடிகர் திலீப் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறார். கடந்த வாரம் அவரிடம் சுமார் 12 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதேபோல அவருக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் நாதிர்ஷா, சகோதரர் அனுப், மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடமும் போலீஸார் தனித் தனியாக விசாரணை செய்தனர். இதனிடையே நடிகர் திலீப் போலீஸில் அளித்த புகாரில், பாவனா வழக்கில் தன்னை சம்பந்தப்படுத்தாமல் இருக்க பல்சர் சுனில் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாவனாவை கடத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள், வீடியோ அடங்கிய மெமரி கார்டை நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனின் ஆடை நிறுவனத்தில் அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸா ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொச்சி அருகேயுள்ள அந்த ஆடை நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்தப் பின்னணியில் நடிகர் திலீப்பிடம் கொச்சியில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

அடுத்து காவ்யா மாதவன்?

வழக்கு தொடர்பாக நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீஸார் பலமுறை முயன்றனர். ஆனால் அவரும் அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்ததாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தப்பட்டு அவரும் கைது செய்யப்படக்கூடும் என்று கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரான இயக்குநர் நாதிர் ஷாவிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டார். மலையாள திரையுலகில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.நடிகர் திலீப் கைது குறித்து காவ்யா மாதவனின் குடும்ப வட்டாரங்களை நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதேபோல நடிகை பாவனாவின் குடும்ப வட்டாரங்களும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் திலீப் கைதானதை அடுத்து, அவர் கேரள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.