1,000 திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சுமார் ரூ.10 கோடி வருவாய் இழப்பு!

 ஜி. எஸ். டி வரி போக மாநில அரசு விதித்துள்ள கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக முதல் வருடன் திரைத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதனால், திரையரங்குகளை மூடும் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம்  இந்தப் பிரச்சினையில் இன்று நல்ல முடிவு கிடைக்கும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நம்பிக்கை தெரிவித்தார். ஜிஎஸ்டி வரியுடன் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் கட்ட வேண்டியிருந்தால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக திரைத்துறையினர் தெரிவித்துள் ளனர். எனவே, கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரை திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதில் நல்ல முடிவு ஏற்படாததால் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரையரங்குகள் நேற்று மூடப்பட்டன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி, நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை திரைத்துறையினர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.சுரேஷ், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களிடம் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘பேச்சுவார்த் தையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், திரையரங்குகளை மூடும் போராட்டம் தொடரும்’’ என்றார்.

நடிகர் விஷால் கூறும்போது, ‘‘அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை இன்றும் தொடரும். கேளிக்கை வரியை ரத்து செய்து மற்ற மாநிலங்களைப்போல ஒரே மாதிரி வரியை விதிக்க வேண்டும் என்று முதல்வர் உள்ளிட்ட அமைச் சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எங்களது கோரிக்கையை பரிசீலனை செய் வதாக அமைச்சர்கள் தெரிவித்துள் ளனர். இன்று நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

முன்னதாக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்துப் பேசினர். அப்போது அபிராமி ராமநாதன், ‘‘எந்த அரசுக் கும் எதிராக நாங்கள் திரையரங் குகளை மூடவில்லை. எங்களது இயலாமையால் திரையரங்குகளை மூடியுள்ளோம். நிதியமைச்சரிடம் இதுகுறித்து எடுத்துரைத்தோம்’’ என்றார்.

ரூ.10 கோடி இழப்பு

தமிழகம் முழுவதும் நேற்று 1,000 திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் சுமார் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரைத்துறையினர் தெரிவித்தனர்.