தி டர்ட்டி பிக்சர், உத்தா பஞ்சாப் ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை தயாரித்த பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த சர்ச்சைக்குரிய படம் “லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா”. சுதந்திரத்தை தேடி அலையும் நான்கு பெண்களின் சமூக வாழ்க்கை மற்றும் பிரைவேட் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசும் இப்படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை குழுவினர் தடை விதித்தனர். கெங்கனா சென் ஷர்மா, ரத்னா பதாக் ஷா ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ள அந்த இந்திப்படத்தை இயக்கியவர் அலன்க்ரிதா ஸ்ரீவட்சவா எனும் பெண் இயக்குனர்.
18ல் இருந்து 55 வயது உடைய நான்கு பெண்கள்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். புர்கா அணிந்த கல்லூரிப் பெண், ஒரு இளம் அழகுக் கலை நிபுணர், மூன்று குழந்தைகளின் தாய், வயதான விதவை என அந்த நான்கு பெண்களின் உணர்வுகளைத்தான் இந்தப் படம் சொல்கிறது. அவர்கள் ரகசியமாக லிப்ஸ்டிக் பூசிக் கொள்கிறார்கள். காண்டம் பற்றி உரையாடுகிறார்கள். சிகரெட் குடித்துப் பார்க்கிறார்கள்… இப்படியாக எதுவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அதையெல்லாம் செய்து பார்க்கிறார்கள். ஆனால் இதற்கு இந்தியாவில் சென்சார் கொடுக்காமல் டபாய்த்து வந்தனர். இதனை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மேல்முறையீட்டு குழுவிடம் முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து 6 மாத போராட்டத்திற்கு பின் அடுத்த மாதம் 21ம் தேதி இப்படம் இந்தியா முழுவதும் ரிலீசாகிறது.
இது குறித்து , “இந்தப் படத்தின் கதை பெண்களை மையப்படுத்தியுள்ளது. அவர்களின் கற்பனையானது எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. பாலியல் காட்சிகள் இருந்தன. ஆபாச வார்த்தைகள் இருந்தன. ஆடியோ போர்னோ கிராபி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வை பாதிக்கிறது என தணிக்கைக் குழு பல்வேறு காரணங்களைச் சொல்லி படத்திற்கு சான்றிதழ் தர மறுத்து விட்டது. ஆனால் இயக்குனரான நான் (அலன்க்ரிதா) மேல் முறையீட்டுக் குழுவுக்குச் சென்றேன். பெண்களின் பாலியல் விருப்பத்தையும் அவர்களின் வெளிப்படுத்தலையும் ஆபாசம் இல்லாமல் உணர்வுப் பூர்வமாகக் கையாண்டால், அதை அனுமதிக்காமல் இருக்க முடியாது என்று கூறியது மேல்முறையீட்டுக் குழு. ஒரு வழியாக ஏ சான்றிதழோடு படம் வெளி வர இருக்கிறது” என்றார்.
அலன்க்ரிதா ஆசுவாசமடைந்திருக்கிறார். ஒரு சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்தார்கள். சில வசனங்களை வெட்டினார்கள் என்று சொன்ன அவர், அவர்களின் தணிக்கையால் தனது கதையம்சமோ கருவோ பாதிக்கப்படவில்லை. தனது படத்திற்கு மேல்முறையீட்டுக் குழு ஆதரவாகத்தான் இருந்தது என்றார். படம் இன்னும் ஒரு பத்துப் பனிரெண்டு நாளில் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.வெளிவந்த பிறகு என்ன வெடிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..