இயக்குநர் இமயம் பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் “குரங்கு பொம்மை”. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கதாநாயகன் விதார்த், “இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படப்பிடிப்புக்கு நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசியவிருது நிச்சயம் வாங்குவார், நமது இயக்குநர் இமயம் ”என்றார்.
மேலும் விதார்த் பேசுகையில், “இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம் இயக்கும் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஏன் இதைச்சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் குரங்கு பொம்மையும் தான் காரணம். எனவே நித்திலனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் உருவாக என் நண்பர்கள் கண்ணன் மற்றும் கர்ணா ராஜா மிக முக்கியமான காரணம். அவர்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம், சம்பளம் தரமாட்டார், திட்டுவார், அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா அவர்கள் என்னிடம் கதை சொன்னதும் உனக்கு இவ்வளவு இலட்சங்கள் சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையை சொன்னார். நானும் சரி என்றேன். அவர் என்ன தொகை சொன்னாரோ, அதே அளவு தொகை ஒரு கடன்காரருக்கு நான் உடனடியாக கொடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் அப்போது இருந்தேன். பாரதிராஜா சார் என்னை அழைத்து கதை சொன்னதும், எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காக கொடுத்தார். சம்பளமாக சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் சம்பளமாக பேசிய முழுத்தொகையையும் ஒரே செக்’காக கொடுத்தார். நான் அதை எதிர்பார்க்கவில்லை. உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பிகொடுத்து அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன். அதே மாதிரி அவ்வளவு அழகாக அன்பாக நடிக்கச் சொல்லிகொடுத்தார். அந்தபடம் வந்ததும் என் வளர்ச்சி அடுத்த லெவலுக்கு கண்டிப்பாக போகும்” என்றார்.
நாயகி டெல்னா டேவிஸ் பேசும் போது, “எல்லாருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத்தான். எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப்போல ஒரு ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நான் எப்படி ஆனாலும் நான் குரங்கு பொம்மை கதாநாயகி என்று தான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை குரங்கு பொம்மை வாங்கித்தரும்”என்றார் டெல்னா டேவிஸ்.
முன்னதாக காலையில் இந்த“குரங்கு பொம்மை” படத்தின் பாடல்கள் வெளியீடு சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வித்தியாச “மாணவர்”, பார்த்திபன் தன் குருவின் குருவை வித்தியாசமாக பாராட்டினார். அவர் பேசுகையில், இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்கவேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன். பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து.
கு / நல்ல குணவான்
ர / சிறந்த ரசனையாளர்
ங் / இங்கிதம் தெரிந்தவர்
கு / குவாலிட்டியானவர் இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம்” என்று பேசினார். மேலும், “இந்த படத்தின் கதாநாயகி, டெல்னா டேவிஸை எல்லோரும் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள். என் பக்கத்து வீட்டுல யாரும் டெல்னா டேவிஸ் மாதிரி அழகா இல்ல. எனவே டெல்னா டேவிஸ், நீங்க என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை என் பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொல்லிப்பேன்” என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. வருவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம் வரமாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்த தளிரை பாராட்டவே வந்தேன். நித்திலன் பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்த படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவார். என் வாழ்த்துகள்.
விதார்த், மிக வீரியமான நடிகன், பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான். அவனுக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.