அண்ணன் தங்கை உறவின் உன்னதத்தை மையமாக்கி உருவாகும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’

சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி.  இவர் தற்போது ‘பியாண்ட்  த க்ளவுட்ஸ் ’ என்ற படத்தினை ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் இயக்கி வருகிறார். ஹிந்தி நடிகர் ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மாளவிகா மோகனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஜீ ஸ்டீயோஸ் மற்றும் ஐகேன்டீ பிலிம்ஸ் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, தயாரிப்பில் இருக்கும் போதே உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மஜித் மஜிதியின் இயக்கத்தில் நடிக்க அனைத்து நடிகர்களும் விருப்பத்துடனும், ஆர்வமுடனும் இருக்க, பலத்த போட்டிகளுக்கிடையே ‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’படத்தில் நடிக்கும் வாய்ப்பை இஷான் கட்டார் பெற்றார். தன்னுடைய தேர்வை உறுதிப்படுத்துவதற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார் இஷான்.  இஷான் கட்டார், தான் அறிமுகமாகும் இந்த படத்தில் எந்த புதுமுக நடிகரும் செய்ய தயங்கும் செயலை துணிச்சலுடன் செய்து படக்குழுவினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கும் போது,‘திரைக்கதையில் ஒரு முக்கியமான காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த காட்சியின் படி இஷான் சேறும் சகதியுமாக இருக்கும் ஒரிடத்தில் பல முறை அவர் மூழ்கி எழவேண்டும். அவர் முகம் முழுவதும் சேறாக இருக்கவேண்டும். இதற்காக படபிடிப்பு மும்பையில் உள்ள ஸீவ்ரி ஜெட்டி என்ற பறவைகள் சரணாலயப்பகுதியில் நடை பெற்றது.  இந்த காட்சியைப் பற்றி இயக்குநர் விளக்கி கூறியதும், எந்தவொரு மறுப்பும் சொல்லா மல், சற்றும் தயங்காமல் சேற்றில் குதித்தார். இந்த காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக சரியாக சொல்லவேண்டும் என்றால் 64 முறை சேற்றில் மூழ்கி எழும் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் காட்சியில் அற்புதமாக நடித்தார். அதன் போது அவரின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சேற்றால் நிறைந்திருந்தது. இயக்குநர் எதிர்பார்க்கும் அளவிற்கு காட்சி சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக இஷானின் இந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பை  இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் பாராட்டினர் ’ என்றார்கள்.
‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’அண்ணன் தங்கை உறவின் உன்னதத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.