ஜனவரி 25ம் தேதி பத்மாவதி திரைப்படம் ரிலீஸ்!

தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படம் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகும். ராஜபுத்திர வம்ச மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பத்மாவதி திரைப்படக் காட்சிகள் உள்ளதாக ராஜ்புத் சேனா, கர்னி சேனா, சாத்ரிய சமோஜ் போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக திரைப்படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகள், போராட்டங்கள் மற்றும் தணிக்கை பிரச்சினை ஆகிய காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து படத்தின் வரலாற்றுத் தகவல்களை ஆய்வு செய்ய முன்னாள் அரச குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வரலாற்றுத் தகவல்களை படம் திரிபு செய்துள்ளதா என்று ஆய்வு செய்தது.

பின்பு தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் திரைப்படத்தின் பெயரை `பத்மாவத்’ என்றும் படத்தின் காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து மத்திய தணிக்கைத் துறை படத்திற்கு `யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வரும் ஜனவரி 25ஆம் தேதி பத்மாவதி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்னிசேனா, “எந்த சமரசமும் இன்றி திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அதன் விளைவுகளைத் தணிக்கைத் துறையும் மத்திய அரசும் சந்திக்க நேரிடும்” என மிரட்டல் விடுத்துள்ளது.

அதேசமயம் அக்‌ஷய்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள `பத்மன்’ திரைப்படமும் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இரண்டு படமும் ஒரே நேரத்தில் நேரடியாக மோதவுள்ள நிலையில், இது குறித்து பத்மன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தினர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

“பத்மாவதி வெளியாவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இரண்டு பெரிய படங்கள் மோதிக் கொள்ளுவது குறித்து எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஆனால் நாங்கள் அறிவித்தது போல் வரும் 25ஆம் தேதி பத்மன் வெளியாவது உறுதி” என்று தெரிவித்துள்ளார். ஆனால் பத்மன் படக் குழுவிற்கு நெருக்கமானவர்களோ, “பத்மாவதி பிப்ரவரி 9 தேதியே வெளியாகும். அதனால் எங்களுக்கு எந்தவித கவலையும் இல்லை” என்று கூறியுள்ளது.