மக்கள் மனசில் இடம் பிடிச்சாச்சு – இளைய ராஜா பெருமை!

சுரேஷ் கிருஷ்ணா தயாரிப்பில் வேலு பிரபாரன் இயக்கியுள்ள படம் ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’. ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ படக்குழுவினரோடு இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் தாணு மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் வரவேற்புரை ஆற்றிய இயக்குநர் வேலுபிரபாகரன், ‘இதற்கு முன்னால், ’வேலு பிரபாகரனின் காதல் கதை’ங்கற படத்தை எடுத்தேன். அந்தப் படத்தை ஆபாசப் படம்னு சொல்லிட்டாங்க. நெருங்கிய நண்பர்களா இருந்தாலும் அப்படித்தான் சொன்னார்கள். அந்தப் படத்தில் ஒரு பாலியல் விஷயத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. 50 கோடி, ஐநூறு கோடிக்குப் படம் எடுத்து மக்களிடம் காட்டும்போது என்னை மாதிரி எளியவனும் மக்களைக் கவரவேண்டும் இல்லையா? அதனால் கொஞ்சம் கிளாமரா எடுத்தேன். அதைப் பாலியல் சார்ந்த படமென்று சொல்லிட்டாங்க. அதனால் என் படத்தில் நடிக்கிறதுக்கே இமேஜ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

 

 

மேலும் ரொம்ப நாள் கழித்து முழுக்கச் செத்து போயிட்டான் என்ற நிலைமையில் இருக்கிற ஒருவனின் முணங்கல்தான் இந்தப் படம். அவனுடைய முணங்கல் மக்களுக்குக் கேட்கப்போகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் இளையராஜா தான். அவரை நம்முடைய ஆதி விதையாக நான் பார்க்கிறேன். அவரிடம் மிகப்பெரிய நேர்மை இருக்கும். நான் பார்த்து நடிக்காத ஒரே மனிதன் இளையராஜா தான். எங்கேயும் யாரிடமும் அவர் நடித்ததில்லை.

இளையராஜா இசை அமைக்க வந்த காலம் மிகப்பெரிய இருண்ட காலம். அப்பத்தான் முழுத் திரையுலகை 20 வருஷம், தன் பாடல்கள் மூலமாகப் பாதுகாக்கிறார் அவர். இப்ப பழைய படங்களைப் பார்த்தா, ரொம்பக் கேவலமா இருக்கும். இது எப்படி ஓடுச்சுன்னு பார்த்தா, அதுக்குக் காரணம் இளையராஜாவின் பாடல்கள். இந்த மாதிரி மனிதனை எந்தக் காலத்துலையும் வதைக்கக் கூடாது. அப்படியொரு மகத்தான மனிதன் அவர்’ என்று பேசினார்.

​அதன் பிறகு பேசிய தயாரிப்பாளர் ‘எஸ்.தாணு ஒரு இயக்குனரின் காதல் டைரி படத்தை நான் பார்த்து மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் இளையராஜாவின் ஒரு பாடல் என்னை நெகிழ வைத்தது. அந்தப் பாடலில் இசையே இல்லாமல் பெண் குரலில் மட்டுமே பாட வைத்திருந்தார். அதைக் கேட்டதும் கண்கள் கசிந்தது. பின்னணி இசையே இல்லாமல் பாடலிலேயே கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டார் இளையராஜா. ஆயிரம் ஆஸ்கர் உங்கள் காலடியில் இருக்க வேண்டும்.

வட இந்தியப் பாடல்கள் தென்னிந்தியாவில் ஒலித்து வந்த நிலையை மாற்றியவர். நான் தயாரித்த ‘வண்ணப் வண்ண பூக்கள்’ படத்திற்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து அது எரிந்து முடிவதற்குள் ஆறு பாடல்களுக்கான டியூன்களை ரெடி பண்ணினார் இளையராஜா’. என்றார்.

பின்னர் பாடலாசிரியர் சினேகன்  பேசிய போது , “முன்பொரு காலத்தில் தமிழ் இசை தொலைந்து போய்விடுமோ என்றொரு பயமிருந்தது. அப்போது தான் ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்று ஒருவர் கிளம்பி வந்தார். நீ கருப்பனாய் பிறந்தது தவறு. குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழகம், சாலைக்குப் பெயர், பள்ளிக் கூடம் என பெயர் இருந்திருக்க வேண்டும். வாழும் கலைஞனுக்கு அங்கீகாரம் கொடுக்காத இந்த சமூகம் எங்களுக்குத் தேவையில்லை. இறந்த பிறகு பத்மபூஷன், பதம்விபூஷன் ஏன். அதெல்லாம் அடுப்பங்கறையில் கொண்டு போய் எரிக்க வேண்டும்.

ஒருவருடைய திறமை அங்கீகரிக்கப்படுவதில் பஞ்சமிருக்கிறது. ஏன் பாராட்டினால் குறைந்து போய் விடுவீர்களா?. இளையராஜா என்ன தீண்டத்தகாதவரா?. இந்த ஒட்டுமொத்த இசையையும் ஆக்கிரமித்திருக்கும் இளையராஜா திமிரோடு இருந்துவிட்டுப் போகட்டுமே. அதில் என்ன தவறு?

இவ்வளவு பெரிய மனிதரை, இப்படி ஓரங்கட்டி வைத்துள்ளார்களே என்று வேதனையாக உள்ளது. இசை ஒரு துளசி மாடத்தைச் சுற்றியே இருந்தது. இன்றைக்கு வயலில் சுற்ற விட்டுவிட்டார் மனிதர். யாருக்கு அந்த தைரியம் வரும். இசை என்பது ஒரு கூட்டுக்குள் கிடந்ததை, இன்றைக்கு தென்றல் மாதிரி ஆக்கியுள்ளாரே அந்த மனிதரைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது” என்று ஆவேசமாகப் பேசிவிட்டு அமரச் சென்றார்.

அப்போது கையில் தயாராக வைத்திருந்த மைக்கில் இளையராஜா பதிலளித்துப் பேசும் போது, “வீதிக்கு நான்கு பள்ளிக்கூடங்கள் என் பெயரில் திறந்தால் போதுமா உனக்கு. உங்கள் மனதில், ரத்தத்தில், உயிரில் எப்போதுமே நிரந்தரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என் இசை. அதை விடுத்து மண்ணிலும், மரத்திலும் என் பெயரை எழுதி வைத்தால் நீண்ட காலம் நின்றுவிடுமோ. மக்கள் மனதிலிருப்பது இளையராஜா என்ற உயிர் ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.