விமர்சனம்- ங்கறது எப்படி இருக்கணும் தெரியுமா? – ரஜினி விளக்கம்!

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நெருப்புடா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், ‘நெருப்புடா’ படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் பேசும் போது, “ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத்தளங்களை ஒழுங்குப்படுத்தவேண்டும் .ஊடகங்கள் திரைப்படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து எழுதுங்கள் விமர்சனம் எழுதுவது உங்கள் வேலை, உங்கள் உரிமை தான் ஆனால், சில நாட்கள் தள்ளி எழுதினால். அந்த நாட்களில் அப்படம் கொஞ்சம் வசூல் ஈட்ட வசதியாக இருக்கும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே விமர்சனம் எழுதுவதால் படம் பார்க்க வரும் கூட்டம் குறைந்து விடுகிறது.” என்று பேசினார்.

விஷாலை தொடர்ந்து பேசிய நடிகர்கள் சத்யராஜ், விவேக், லாரன்ஸ், என்று அனைவரும், விஷால் பேசியது போலவே ஊடகங்கள் விமர்சனம் எழுதுவது குறித்தே பேசினார்கள். குறிப்பாக நடிகர் லாரன்ஸ் “விஷால் சார் நீங்க எதற்காக இதை கோரிக்கையாக வைக்கிறீங்க, ஒரு சட்டம் போடுங்க. விமர்சனம் எழுதுபவர்கள் அப்போது தான் திருந்துவார்கள். இல்லையா வாங்க எல்லோரும் போராட்டம் நடத்தி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று கோபமாக பேசினார்.

பின்னர் விழாவின் ரஜினி பேசும் போது, “திரையுலகம் பத்தி நம்ம விஷால் ஒரு கோரிக்கை வைத்தார் மீடியாவுக்கு. அர்த்தமுள்ள கோரிக்கை அது. நானும் அதை ஆமோதிக்கிறேன். மீடியாக்களும் இதப் பத்தி சீரியஸா யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன். படம் எடுப்பது எங்களுடைய வேலை, பொறுப்பு, கடமை. அதை விமர்சிக்கிறது உங்க உரிமை. ஆனா அந்த விமர்சனம் எப்படி இருக்கணும்ங்கறது… அதாவது சொல்லும் முறை முக்கியம். ஒருத்தரை வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூப்பிட்டுட்டு, ‘சாப்பிடுங்க… நல்லா சாப்பிடுங்க’ என்று கூறுவது வேறு. ‘சாப்ப்டு.. நல்ல்ல்லா சாப்பிடு’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கல்லவா. ஒரே விஷயம்தான். ஆனால் சொல்லும் முறை என ஒன்றிருக்கிறது. விமர்சனம் பண்ணுங்க.. ஆனா அடுத்தவர் மனசு நோகாம, வார்த்தைகளை சரியா பயன்படுத்துங்க..

உதாரணத்துக்கு. ஒரு ராஜா இருந்தார். அவருக்கு பிள்ளையே பிறக்கவில்லை. அவர் போகாத கோயில் கிடையாது, வணங்காத கடவுள் இல்லை. அவருக்கு 20, 30 வருடங்கள் கழித்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதனால் ரொம்ப சந்தோஷப்பட்ட ராஜா, எல்லோரையும் அழைத்து குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜாதகம் காட்டி ஜோசியம் பார்க்கச் சொன்னார்.

‘நிச்சயம் உங்கள் மகனால்தான் உங்களுக்கு மரணம் நிகழப்போகிறது’ என்று ஜோசியம் பார்த்த பலரும் சொன்னார்கள். ‘இவன் உங்களை கொல்வான்’ என்று எல்லோரும் ஒரேமாதிரி சொன்னார்கள். இதனால் கோபப்பட்ட ராஜா, ஜோசியம் சொன்ன அத்தனை பேரையும் சிறையில் தள்ளி, ’10 நாட்களில் இவர்களின் தலையை எடுத்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

இவர்களைத் தவிர்த்து, இன்னொரு ஜோசியக்காரர் வந்தார். பெரிய ஜோசியக்காரர் என்பதால் ஏற்கெனவே நடந்ததைத் தெரிந்துகொண்டுதான் வந்தார். குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தார். ‘நீயெல்லாம் பெரிய ராஜாவே கிடையாது. உன் குழந்தைதான் உன்னைவிட 10 மடங்கு பெரிய ராஜாவா இருப்பான். பேர், புகழ்ல உன்னை விட 100 மடங்கு இருப்பான். இந்த மாதிரி ஒரு ஜாதகத்தைப் பார்த்ததே கிடையாது.’ என்றார்.

ராஜா மிகவும் மகிழ்ச்சியில், என்ன வேண்டுமானாலும் கேள் என்றார். சிறையில் இருக்கும் ஜோசியக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்றார் அந்த ஜோசியக்காரர்.

எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு உங்கள் மகன் தான் மரணத்துக்குக் காரணமாக அமைவான் என்று சொல்லக் கூடாது. ஆன்லைன் விமர்சகர்களும் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும்

அது மாதிரி தயாரிப்பாளரும் அனைவருமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை விற்க வேண்டும். நாம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் அவர்களுடைய பொருளை விற்பதற்கு பல்வேறு வகையில் ஷோ காட்டுவார்களை. அதை நம்பி வாங்கிவிட்டு நஷ்டம் அடைந்துவிட்டேன் என்று கூறுவதும் தப்பு. விநியோகஸ்தர்கள் இந்தப் படம் இவ்வளவு வசூல் செய்யுமா என்று முன்னணி விநியோகஸ்தர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்க வேண்டும். திரையுலகினர் அனைவருமே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல வேண்டும்” என்றார் ரஜினி.