சாண்டோ சின்னப்பா தேவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர்.அதிலும் தமிழ் திரையுலக வரலாற்றில் முத்திரை பதித்துச்சென்ற தயாரிப்பாளர்கள் பலர் இருந் தாலும் ரசிகர்களிடம் கேட்டால் அவர்கள் பட்டியலிடும் முதல் ஐந்து பேரில் ஒருவராக இருப்பார் தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பதேவர். கோயம்புத்தூரை தாய்மண்ணாக கொண்ட சாதாரண ஒரு மில் தொழிலாளியான தேவர், தற்காப்புக் காக கற்று வைத்திருந்த மல்யுத்த கலைதான் அவரை கலையுலகத்துக்குள் கொண்டு வந்தது. அபார உடல்க ட்டும், மல்யுத்தம் போன்ற கலைகளையும் அறிந்தவர்களை சாண்டோ என்று அழைப்பார்கள். பின்னாளில் அதுவே அவருக்கு அடைமொழியாகவும் மாறிப்போனது.

1940-ல் வெளிவந்த திலோத்தமா என்கிற படத்தில் சின்னப்பதேவர் மல்யுத்த வீரனாக ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். பிறகு எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டு அவர் ஹீரோவாக நடித்த ராஜகுமாரியில் அடையாளம் காட்டப்படும் ஒரு கேரக்டரில் நடித்தார். எம்.ஜி.ஆர்தான் அந்த கதாபாத்திரத்திற்கு தேவரை சிபாரிசு செய்தார். இதுவே தேவர் எம்.ஜி.ஆரின் மீது அளவு கடந்த பாசம் வைக்கவும் தயாரிப்பாளராக மாறியபின்பு அவரை வைத்து அதிக படங்கள் தயாரிக்கவும் அடித்தளம் இட்டது என்றுகூட சொல்லலாம்..

வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து முன்னேறிவந்த தேவருக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற வேகம் பிறந்த்தில் ஆச்சரியமில்லை. கோவையில் இருந்த தனது நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு சென்னை வந்த தேவர் 1955ல் தேவர் ஃபிலிம்ஸை ஆரம்பித்தபோது மூன்றை மட்டுமே தன் சினிமா வாழ்க்கையில் முதலீடாக செய்தார்.. அது… எம்.ஜி.ஆர், முருகப் பெருமான் மற்றும் வாய்பேசமுடியாத விலங்குகள்..

தேவர் பிலிம்ஸை துவக்கியதுமே எம்.ஜி.ஆரை நாயகனாக்கி தன் இன்னிங்ஸை ஆரம்பித்தார் தேவர். முதல்படம் தாய்க்குப்பின் தாரம் 1956ல் வெளியானது. தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் தான் டைரக்டர். படம் வசூலை வாரிக்கொட்ட அன்றிலிருந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் வெற்றி நடைபோட்டது எம்.ஜி.ஆர்-தேவர் கூட்டணி..

‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைத்த துணிச்சல் தேவருக்கு மட்டுமே சாத்தியமானது. தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், முகராசி என தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மட்டும் எம்.ஜி.ஆர். பதினாறு படங்களில் நடித்தார். இதில் முகராசி படத்தில் எம்.ஜி.ஆரையும் ஜெமினிகணேசனையும் இணைந்து நடிக்கவைத்தார் தேவர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான்.

எம்.ஜி,ஆரால் தேவர் வளர்ந்தாரா..? தேவரால் எம்.ஜி.ஆர் திரையுலக வெற்றிகளை கண்டாரா.?விடை கண்டுபிடிப்பது கடினம்தான். யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது.

எம்.ஜி.ஆர் கிடைக்காத காலங்களில் அவர் ஆன்மீகப் படங்களையும், மிருகங்களை வைத்து வணிக ரீதியான படங்களையும் எடுத்து வெற்றி கண்டார். அவற்றை தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்னும் பேனரில் தயாரித்தார். என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.

தமிழ் மட்டுமே தெரிந்த தேவர் ராஜேஷ்கண்ணாவை வைத்து ஹாத்தி மேரா சாத்தி என்ற படத்தை எடுத்து இந்தியிலும் தன் வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். இந்தியில் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியைக் கண்டு அதே படத்தை எம்.ஜி.ஆரை வைத்து நல்லநேரம் என ரீமேக் செய்தார். தேவர் ஃபிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் நல்லநேரம்தான்.

1977-ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனபின், படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்த தேவர் ‘தாய் மீது சத்தியம்’படத்தை ஆரம்பித்தார். இதில் ரஜினிகாந்த்தின் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். தேவரின் மருமகன் ஆர்.தியாகராஜன் இந்த படத்தை டைரக்ட் செய்தார்.

தேவர் ஃப்லிம்ஸ்க்கு என்றே தனியாக கதை இலாகா ஒன்றை உருவாக்கிய தேவர், தனது படத்திற்கு யாரை ஒப்பந்தம் செய்வது என்றாலும் அவர்களை மறுபேச்சு பேசவிடாமல் நோட்டுக் கற்றைகளால் அபிஷேகம் செய்து அவர்களை திக்குமுக்காட வைத்துவிடுவார். தேவர்ஃபிலிம்ஸ் என்றாலே சம்பளம் உத்திரவாதம் என்பதால் தேவரின் பேச்சுக்கு மறுபேச்சு என்பதே எழவில்லை.

படத்திற்கு பூஜை போட்டுவிட்டால் அறுபதே நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதை தனது கொள்கையாகவே வைத்திருந்தார் தேவர். படம் பார்க்க வரும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தன் அனுபவத்தாலேயே உணர்ந்து, அதற்க்கேற்ற வகையில் தனது படங்களின் கதையை அமைக்க சொல்வார் தேவர். “ஏழை மக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவுமே எனது படங்கள்.. கதைய எளிமையா சொல்லுங்கடா..” என்று தன் கதை இலாகாவையே பாடாய்ப்படுத்திய தேவர், ஆடு, மாடு பேசும்னு நான் நம்புறேன்.. என் முருகன் என்னை கைவிடமாட்டான் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தையே கிடுகிடுக்க வைத்தார்.

எம்.ஜிஆரை வைத்து வரிசையாக படங்களாக எடுத்து தள்ளிய தேவர் நடிகர்திலகம் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை என்பது திரையுலகம் இன்றுவரை வியக்கும் ஆச்சர்யங் களில் ஒன்று. இதுபற்றி ஒருமுறை தேவரிடம் கேட்டதற்கு, ‘சிவாஜிக்கு ஏற்ற கதை என்னிடம் இல்லை’என்று ஒரே வரியில் பதில் அளித்தாராம் தேவர். அதேபோல எம்.ஜி.ஆரின் புகழுக்கு காரணமான பாடல்களை தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தேவர் ஃபிலிம்ஸின் படம் ஒன்றிற்குகூட இசை அமைக்கவில்லை என்பதும் இன்னொரு சரித்திர ஆச்சர்யம்.

தேவரின் மறைவுக்கு பிறகும் அவர் குடும்பத்தினர் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டனர். ரஜினி காந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ரங்கா’, ‘தர்மத்தின் தலைவன்’ உள்பட பல படங்களை எடுத்தனர். அவை வெற்றிகரமாகவே ஓடின. ஆனால் அதன்பின் அவர்கள் எடுத்த படங்கள் சரியாக போகாத்தால் ஒருகட்டத்தில், சாண்டோ சின்னப்பா தேவர் என்ற மகத்தான மனிதரால் உருவாக்கப்பட்ட தேவர் ஃபிலிம்ஸ் தனது படத்தொழிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பட நிறுவனமும் ஒரு தயாரிப்பாளரும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தேவரையும் தேவர் ஃபிலிம்ஸையும் விட சிறந்த உதாரணம் இருக்கமுடியுமோ?

தேவர் பிரித்த பங்கு

ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார் தேவர்,. முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுவதாக தேவர் எண்ணியதால் லாபத்தில் கால் பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார்.பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல கோவில்கள் இதனால் பலன் அடைந்தன.

ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டார். மற்றொரு பங்கை, தனக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, சினிமா எடுக்க 10ஆயிரம் ரூபாயுடன் சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார்.

ஒவ்வொரு பட வெற்றியிலும் பணத்தை அள்ளி அள்ளி தன் முருக பெருமானுக்காக ஆறு படை வீடுகளிலும் செலவு செய்வதையே வழக்கமாக கொண்டவர். மருதமலையை ஏழாவது படையாக ஆக்கியே தீருவது என்று 1962ம் ஆண்டு மருதமலை முழுவதும் மின்சார வசதி செய்து கொடுத்தார்.

தேவரின் வலதுகரம்

தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களைத் தேவரின் தம்பியும், புகழ் பெற்ற எடிட்டருமான எம்.ஏ.திருமுகம் இயக்கினார். கிட்டத்தட்ட தேவரின் வலது கரமாகவே விளங்கினார் எம்.ஏ.திருமுகம். தேவர் பிலிம்ஸ் நிர்வாகத்தை தேவரின் மற்றொரு தம்பியான மாரியப்பன் கவனித்துக்கொண்டார். தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமியை மணந்தவர் ஆர்.தியாகராஜன். இவரும் பிறகு இயக்குநர் ஆனார். சிவகுமார் நடித்த ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘ஆட்டுக்கார அலமேலு’ஆகியவை இவர் இயக்கிய படங்களே.

எம்.ஜிஆர்-தேவர் செண்டிமெண்ட்

எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகியைத் திருமணம் செய்த பிறகு தனது ஒவ்வொரு திருமண நாளன்றும் தான், பெரிதும் மதிக்கும் சாண்டோ சின்னப்ப தேவரை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி ஆசீர்வாதம் பெறும் போதெல்லாம் புதுப்படம் ஒன்றுக்கு தேவர் பிலிம்சில் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டுப் போவது எம்.ஜி.ஆரின் வழக்கம். அதேபோல சின்னப்பா தேவரின் உடல் அடக்கம் கோவையிலேயே நடந்தபோது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். ஊர்வலத்துடன் கடைசிவரை நடந்தே சென்று தேவரிமீது தான் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தினார்..

சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு தின பதிவு –செப்டம்பர் 8., 1978.