எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்” – ஒரு சுவையான பின்னணி!

”மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

“நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.

இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார். கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.

எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். “மலைக்கள்ளன்” 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.

அடிசினச்ல் தகவல்:

அரசியல் பிரச்சினை காரணமாக நாமக்கல்கவிஞருடன் கலைஞர் முரண்பட்டாலும்அவர் முதல்வராக இருந்தபோது நாமக்கல் கவிஞரின் குடும்பத்தின் சிரமங்களைஅறிந்து தமிழக அரசின் உதவித் தொகை வழங்குவதற்கு உத்தரவிட்டார். தமிழக அரசின் சார்பில்கட்டப்பட்ட தலைமைச் செயலகபத்துமாடிக்கட்டடத்துக்கு நாமக்கல் கவிஞர்மாளிகை எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தார். கலைஞர் கருணாநிதி.

error: Content is protected !!