இந்திப் பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் நிஜ அடி, உதை, தாக்குதல்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜெய்கர் கோட்டையில் பத்மாவதி என்ற இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பினர் வரலாற்று புகழ் பெற்ற பத்மாவதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவரையும் குழுவினரையும் அவர்கள் தாக்கினர். ஏற்கனவே கேட்டுக்கொண்டோம் பத்மாவதி படத்தின் திரைக்கதை நகலை காட்டுவதற்கு சஞ்சய் லீலா பன்சாலி முன்வரவில்லை என்ற எதிர்ப்பாளர்கள் கூறினர். செட்டில் ஆர்பாட்டக்காரர்கள் புகுந்து உபகரணங்களை அடித்து நொறுக்கியதோடு, இயக்குநர் பன்சாலியை அடித்து அவரது முடியை பிடித்து இழுத்ததாகவும் ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன.

பன்சாலி மற்றும் வயாகாம் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘பத்மாவதி’. இதில் தீபிகா பதுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர், படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வருகிறார். இந்தப் படம் ராணி பத்மினி பற்றிய கதையைக் கொண்ட வரலாற்றுத் திரைப்படமாகும். வரலாற்றின் படி அலாவுதின் கில்ஜி, ராணி பத்மினியை தன் ஆசைக்கு இணங்க வைக்க கோட்டையை நோக்கி படையெடுத்தார். அப்போது கில்ஜியின் ஆசைக்கு இணங்க மறுத்த ராணி பத்மினி சில பெண்களுடன் தற்கொலை செய்துகொண்டார். இந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பன்சாலி ‘பத்மாவதி’ கதையை உருவாக்கி வருகிறார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து பன்சாலி தயாரிப்பு நிறுவனம், “மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ராணி பத்மாவதி கதாபாத்திரத்துக்கும், அலாவுதின் கில்ஜி கதாபாத்திரத்துக்கும் நடுவில் எந்த விதமான காதல் காட்சிகளோ, கற்பனைக் கனவு காட்சிகளோ படத்தில் இல்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

இதனிடையே பன்சாலி மீது தாக்குதல் நடத்தியதற்கு, இந்தி திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள்.