‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்துள்ள படம் தான் With Love. அவருடன் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவுந்தர்யா ரஜினிகாந்த், பஸிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பஸிலியான் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை, மதன் கதை–திரைக்கதை–இயக்கம் என மூன்றையும் கையில் எடுத்துச் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே உணர்வுகளை நிதானமாக கையாளும் மெச்சூரான முயற்சியாக ‘With Love’ அமைந்திருக்கிறது.
அம்மாவை இழந்த வலி, தந்தையுடன் உள்ள சொல்லப்படாத இடைவெளி ஆகியவற்றால் மன அழுத்தத்தில் வாழும் இளைஞனாக அபிஷன் ஜீவிந்த் வருகிறார். அவனை வாழ்க்கையின் ஓட்டத்திற்கு மீண்டும் நாரமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அக்கா திருமணம் பேச முடிவு செய்கிறாள். மேட்ரிமோனி வழியாக பார்க்கச் செல்லும் பெண், அவனுக்கு முற்றிலும் புதிதல்ல என்பது தெரிய வரும் தருணமே கதையின் முதல் அழகான ட்விஸ்ட். இருவரும் பள்ளிக்கால நண்பர்கள் என்பதும், அந்த நினைவுகள் மீண்டும் உயிர் பெறுவதும், படம் முழுக்க ஒரு நெகிழ்ச்சியான டோனை உருவாக்குகிறது. இதோடு, பள்ளி நாட்களில் இருந்த காதல், அந்தக் காதலின் பின்னணி மற்றும் “பழைய காதல் மீண்டும் சந்தித்தால் என்ன ஆகும்?” என்ற கேள்வி கதையை திருச்சி வரை இழுத்துச் செல்கிறது. நண்பர்கள், நினைவுகள், தவறுகள், வருத்தங்கள் என வாழ்க்கையின் பல பரிமாணங்களை படம் மெதுவாக விரிக்கிறது.

படத்தின் ஆரம்பம் இயல்பான சிச்சுவேஷனில் தொடங்குவது பெரிய பலம். கல்யாணப் பெண் பார்க்கும் சீனில் வரும் ட்விஸ்ட் கதையின் திசையை சரியாக அமைக்கிறது. முதல் பாதியில் சில இடங்களில் வசனங்கள் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றினாலும், கதையின் நோக்கம் தெளிவாகப் புரிய வைக்கப்படுகிறது. சில தருணங்களில் “இதை இவ்வளவு ஓபனா பேச வேண்டுமா?” என்ற கேள்வி எழுந்தாலும், இடைவேளைக்குப் பிறகு படம் முற்றிலும் வேறு லெவலுக்கு மாறுகிறது. சென்டிமென்ட், நினைவு, வாழ்க்கையின் யதார்த்தம் – மூன்றையும் கலந்த திரைக்கதை இரண்டாம் பாதியில் முழு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரவணன் நடித்த ஆசிரியர் கதாபாத்திரம் பெரிய திருப்பம் கொடுக்காவிட்டாலும், சொல்லப்பட்ட விதம் மனதில் நிற்கிறது.
இந்தப் படத்தின் முக்கியமான பிளஸ் – பெண்களின் தனித்தன்மை, சுயமரியாதை, தன்னம்பிக்கை ஆகியவற்றை எந்த பிரசங்கமும் இல்லாமல் இயல்பாக சொல்லியிருப்பது. முதல் பாதியில் தோன்றி மறையும் ஒரு பெண் கதாபாத்திரம், இரண்டாம் பாதியில் எடுக்கும் மாற்றம் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. பழைய காதலை இழந்த ஒரு மனிதன் அனுபவிக்கும் மனநிலை, அதிலிருந்து அவன் உடைந்து மீண்டும் எழும் தருணங்கள் நுணுக்கமான காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் லைலா கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தை நினைவூட்டும் அளவுக்கு ஒரு பெண் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது என்பதே ‘With Love’ படத்தின் பெரிய வெற்றி.
நடிப்பில் அனஸ்வரா ராஜன் கண்களாலும் மெல்லிய முகபாவனைகளாலும் கதையை தூக்கிச் செல்கிறார். காவ்யா அனில் திரையில் ஒரு அமைதியான அழகும், உறுதியான உணர்வும் கொண்ட பாத்திரமாக மனதில் நிற்கிறார். அபிஷன் ஜீவிந்த், குறிப்பாக இரண்டாம் பாதியில் கனமான நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோவாக முழுமையாக பாஸ் மார்க் எடுத்து விட்டார்.. தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் ஆகியோர் தங்களுக்கான இடத்தில் சரியான பங்களிப்பை அளித்துள்ளனர். ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப அம்சங்கள் இரண்டாம் பாதியில் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. முதல் பாதியில் இன்னும் கொஞ்சம் துறுதுறுப்பு இருந்திருந்தால் ‘With Love’ இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும், உணர்ச்சிகளால் பார்வையாளர்களை இணைக்கும் இரண்டாம் பாதி இந்தப் படத்தை ஒரு மனதைத் தொடும் அனுபவமாக மாற்றுகிறது.
ரொம்ப நாள் கழித்து ஒரு அழகான காதல் படம்.
