கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மாசிலா என்கிற ஊரில், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்கும் தாத்தா (ராஜ்கிரண்). எம்ஜிஆர் மறைந்த அதே நாளில் பேரன் பிறக்க, “வாத்தியாரைப் போல இவனை வளர்க்க வேண்டும்” என்கிற ஆசையில் கார்த்தியை வளர்க்கிறார். எம்ஜிஆர் காட்டிய நல்வழியில் கார்த்தி நடந்தாரா? இல்லையா? என்பதே ஒன்லைன் கதை. இதை கொஞ்சம் விரிவாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களால் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநராகப் பெயரெடுத்த நலன், வா வாத்தியார் படத்தில் என்ன சொல்லியிருக்கிறார்… எப்படி சொல்லியிருக்கிறார்… என ஒவ்வொரு காட்சியாக எதிர்பார்த்து பார்த்தால், “கதையும் இல்ல… ஒன்னும் இல்ல” என்பதே இறுதியில் புரிகிறது.
நலன் குமாரசாமியிடமிருந்து சற்றும் எதிர்பார்க்காத ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஆரம்பக் காட்சிகள் ஓரளவு ஆர்வம் கூட்டினாலும், அதன் பின் தொடர்ந்து வரும் காட்சிகள் கடும் அமச் சோர்வை ஏற்படுத்துகின்றன.
எம்ஜிஆரை மையமாக வைத்தே நாயகனின் செயல்பாடுகள் இருந்தாலும், அவரை முழுமையாக உள்வாங்கிய உணர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இளம் தலைமுறை ரசிகர்களுக்கு கதையுடன் தொடர்பு ஏற்படாமல் போகும் அபாயம் அதிகம்.
கார்த்தி பொதுவாக கதைகளில் கவனம் செலுத்தும் நடிகர். சில படங்களில் ஊகம் தவறினாலும், வித்தியாசமாக ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால் இங்கு, அந்த வித்தியாசம் வெளிப்படாமல், கதையின் பலவீனத்தால் மொத்தப்படமும் காலி பெருங்காய டப்பாகிவிடுகிறது.
கார்த்தி – எம்ஜிஆர் சாயல் – காட்சிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோன்றுகின்றன.

க்ருத்தி ஷெட்டிக்கு கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. அவரின் கவர்ச்சியை நம்பி தப்பிக்கலாம் என இயக்குநர் நினைத்தாரோ என்னவோ, கதாபாத்திரம் வலுவில்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ராஜ்கிரண் வரும் காட்சிகள் மட்டும் ஓரளவு ஆறுதலைத் தருகின்றன. சத்யராஜ் தோற்ற வடிவமைப்பு கவனம் ஈர்க்கிறது. ஆனால் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படி பாத்திரம் ஏதுமில்லை
கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும், மசாலாவை சரியாக கலந்து தர வேண்டும் என நலன் குமாரசாமி மெனக்கட்டிருப்பது தெரிகிறது. ஆனால் அதுவே இந்தக் கதைக்கு பலவீனமாக மாறியுள்ளது. எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி, குறிப்பிட்ட அரசியல் செயல்பாடுகளை மறைமுகமாகச் சாடும் முயற்சியும் படத்தில் இஉர்க்கிறி.
கார்த்தியும் எம்ஜிஆரும் கண்ணாடி வழியாக ஒருவரை ஒருவர் சந்திக்கும் காட்சி, இடைவேளைக் காட்சியின் எடிட்டிங், சின்ன சின்ன விசயங்கள் ஓரளவு நன்றாக அமைந்துள்ளன. “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” பாடலை எடுத்த விதமும் ரசிக்க வைக்கிறது.
எம்ஜிஆர் என்ற பேரை முன்னிறுத்தி ஒரு நேர்த்தியான அரசியல்–சினிமா கருத்தை சொல்லலாம் என்ற வாய்ப்பு வா வாத்தியார் படத்திற்கு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தத் தவறியுள்ளது படக்குழு. தெளிவான நோக்கமும் உறுதியான திரைக்கதையும் இல்லாமல், பல எண்ணங்கள் சிதறிக் கிடப்பதாலேயே படம் எங்கும் சென்று சேராமல் நின்று விடுகிறது.
எம்ஜிஆர் மரபை சுமக்க வந்த ‘வா வாத்தியார்’, அந்த பாரத்தின் கனத்தைத் தாங்க முடியாமல் நடுப்பாதியில் தளர்ந்து விடுகிறது.
