மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் திரெளபதி 2
நாடகக் காதலை மையமாக வைத்து 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் திரெளபதி. அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதே பெயரில் வேறு வரலாற்று கதையை சொல்லியிருக்கிறார் மோகன் ஜி.
வரலாற்றுப் பின்னணி
சேர, சோழ, பாண்டியர் என அறியப்பட்ட தமிழக மன்னர்களைத் தாண்டி, பல நூற்றாண்டுகளாக தமிழகத்தை அந்நிய படையெடுப்புகளிலிருந்து காத்து நின்ற வல்லாளர், காடவராயர், சம்புவராயர், கச்சிராயர், உடையார்பாளைய அரசர்கள் போன்ற வரலாற்றுப் பெருமைகளை திரையில் கொண்டு வர முயன்றுள்ள படம் தான் திரௌபதி II. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேந்தமங்கலம், உடையார்பாளையம் போன்ற அரண்மனைப் பகுதிகளை அழகான காட்சிகளாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.
கதை மையம்
தென்னிந்தியாவுக்குள் நுழையும் அந்நிய சுல்தான், இங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயற்சிப்பதும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் நடத்துவதும் கதையின் முக்கிய அம்சமாக வருகிறது. இதை பொறுத்துக் கொள்ளாத அரசரின் படைத் தளபதியான காடவராயன், அந்த அநீதிக்கு எதிராக களமிறங்குவது தான் படத்தின் மையக் கதை. பக்தி, அறம், தர்மம் ஆகியவற்றோடு வாழும் மக்கள் குறித்த பார்வையை சமீப கால தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத வகையில் படம் முன்வைக்கிறது.
நடிப்பு
காடவராயனாக நடித்துள்ள ரிச்சர்டு ரிஷி கதாபாத்திரத்தோடு முழுமையாக ஒன்றியிருக்கிறார். போர்க்கள காட்சிகள், வசன உச்சரிப்பு, உடல் மொழி என அனைத்திலும் தன்னை நிரூபித்திருக்கிறார். தமிழ் சினிமா அவரை இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற எண்ணத்தை இந்த படம் உறுதி செய்கிறது. நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இருந்தாலும், பல கதாபாத்திரங்களுக்கு திடமான எழுத்து கிடைக்காதது ஒரு குறையாக தெரிகிறது. கதையின் நாயகி, தீயில் தோன்றிய திரௌபதியாகவே வாழ்ந்து காட்டுகிறார்.

மேக்கிங் & தொழில்நுட்பம்
குறுகிய காலத்தில், குறைந்த செலவில் பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. AI, CG, VFX, லைவ் லொகேஷன் என அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மேக்கிங் செய்யப்பட்டிருக்கிறது. லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. ஜிப்ரான் பின்னணி இசை பல காட்சிகளுக்கு நல்ல உயிரோட்டத்தை கொடுக்கிறது.
திரைக்கதை & குறைகள்
முதல் பாதி காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், சில இடங்களில் சீன்கள் சடாரென்று முடிந்தது போல உணர்வு தருகிறது. திரைக்கதை இன்னும் இறுக்கமாக பரபரப்பாக அமைந்திருக்கலாம். படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் வந்தாலும், பலருக்கும் கதையில் வலுவான பங்கு இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. VFX மற்றும் AI காட்சிகள் இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்கலாம்; பெரிய வரலாற்றுப் படங்களோடு ஒப்பிடும் போது இது சற்று பின்தங்குகிறது.
கருத்து & தாக்கம்
மண்ணையும், பெண்ணையும் தொட்டவனுக்கு கடும் தண்டனை என்ற கருத்தை, முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் இயக்குனர் வலுவாக பதிவு செய்கிறார். பெண்களை போகப் பொருளாக பார்க்கும் அந்நிய ஆட்சியாளர்களுக்கும், அறத்துடன் வாழும் தமிழ் அரச மரபுக்கும் இடையேயான மோதல் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கதைக்களத்தை சினிமாவாக எடுக்க, இயக்குனர் மோகன் ஜி தவிர வேறு யாருக்கும் துணிவு இருக்காது என்றே தோன்றுகிறது. இன்னொருபுறம் வெறுப்பு பிரச்சாரமும் உண்மையில் இங்கு நடக்காத சம்பவங்களும் படத்தில் வருவது வருத்தம் தான்.
மதிப்பீடு
திரௌபதி II – குறைகள் இருந்தாலும், தமிழர்கள் தங்கள் வரலாறையும், அடையாளத்தையும் அறிந்து கொள்ள உதவும் ஒரு துணிச்சலான முயற்சி. திரௌபதி (Part 1) அளவிற்கு இந்த பாகம் பொதுமக்களை கவருமா என்பது சந்தேகம் இருந்தாலும், வரலாறு, பக்தி, அறம் மீது ஆர்வம் உள்ளவர்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு திரை காவியம்.
