ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்.
நடிகர் வினோத் பேசியதாதவது, ”பாலாஜியுடனான நட்பு எனக்கு மிர்ச்சியில் இருந்து ஆரம்பித்தது. இந்தப் படத்திற்கு பிறகு நிச்சயம் நல்ல விஷயங்கள் அவனுக்கு காத்திருக்கிறது. ‘பானிபூரி’ அதற்கு தொடக்கமாக அமையும். அனைவருடனும் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி”.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது,
“இருபது வருடங்களாக நானும் ரேடியோவில் இயங்கி வருகிறேன். அங்கிருந்து இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் நான் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கிறேன். அதற்கு உங்களைப் போல நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் விமர்சனங்களும் தான் காரணம் என நினைக்கிறேன். நீங்கள் இலைகளை வெட்டலாம், கிளைகளை வெட்டலாம், ஏன் மரங்களை கூட வெட்டலாம் ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது என்ற பாப்லோவின் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் என்னதான் கடினமாக உழைத்தாலும் நமக்கான இடம் இன்னும் சரியாக கிடைக்கவில்லையோ என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பது போல எனக்கும் இருந்தது. அப்போது எல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் ஒரு சரியான நபர் உத்ரா ஸ்ரீதரன். ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். ரேடியோவில் சேர்ந்த போது அவர் எனக்கு அறிமுகமானார். அவர் மூலமாக தான் இவர்கள் எனக்கு அறிமுகம் ஆகி இந்த மேடையில் நிற்கிறேன். ‘பானிபூரி’ படம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் ஜாலியான ஒரு கதை என்று சொல்ல முடியாது. நிறைய உலகளாவிய விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறோம். முன்பு லிவ்வின் ரிலேஷன்ஷிப் பற்றிய கதைகள் வந்த பொழுது குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. காதலை கண்ணியமாக காட்ட முடியாத என்ற பிடிப்பில ஆரம்பித்த ஒரு கதைதான் ’பானிபூரி’. இந்த கதையை 15 நாட்களில் படமாக்கினோம். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய அணி. தொழில்நுட்ப அணி, நடிகர்கள் என அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு சிறப்பாக பணி செய்து கொடுத்துள்ளனர். இந்தப் படத்தை நீங்கள் குடும்பமாக சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். இந்த பானிபூரியை சோளாபூரியாக மாற்றிக் கொடுங்கள்” என்றார்.