நடிகர் மணிகண்டன் வர்த்தக மதிப்புள்ள நட்சத்திரமாக உயர்வார் – இயக்குநர் பாலாஜி சக்திவேல்

எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை பரிசளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், மணிகண்டன், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாகா, கௌசல்யா நடராஜன், உமா, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், கலை இயக்குனர் ஸ்ரீகாந்த், படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், விநியோகஸ்தர் சக்தி வேலன், கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ். பி. சக்திவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ” இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான… திறமையான கலைஞர்களை தேர்வு செய்த விசயத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்ற நுட்பமான ஆளுமைகளை கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் விநாயக்கை நான் மனதார வரவேற்கிறேன்.

குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன். இவரை கண்டுபிடித்து இப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விநாயக்கை வாழ்த்துகிறேன். பிரபலமான நடிகராகவும், நட்சத்திர மதிப்புள்ள நடிகராகவும் உயர்வதற்கான அனைத்து தகுதிகளும் மணிகண்டனிடம் இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்வார் என்பது என்னுடைய நம்பிக்கை.

படத்தில் பணியாற்றிய சக கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.