காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? – போர் தொழில் அசோக்செல்வன் !!!

அறிமுக  இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

நடிகை நிகிலா விமல் பேசுகையில், ” என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் ‘போர் தொழில்’ படத்திலும் நடித்திருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாரதி, ‘இயக்குநரிடம் கதையை கேளுங்கள். பிடித்திருந்தால்  நடிக்கலாம்’ என கூறினார்.

ஒரு சின்ன கதையை சொல்கிறேன். அதற்கு முன் ஒரு குட்டி பிளாஷ்பேக். இயக்குநர் ஒருவர் என்னிடம் கதை சொல்ல வருகை தந்தார். லேப்டாப்பை திறந்து வைத்து, கதையை சொல்லத் தொடங்கினார். கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார். அதன் பிறகு நான் அவர் திறந்து வைத்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘லேப்டாப்பை ஒரு பில்டப்புக்காக திறந்து வைத்திருக்கிறேன். மற்றபடி அதில் எந்த விசயமும் இல்லை’ என்றார்.

இதற்கு அடுத்த நாள் தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை சொல்ல வந்தார். அவரும் வந்தவுடன் லேப்டாப்பை திறந்து வைத்தார். மனதில் நேற்றைய சம்பவம் ஓடியது. இருப்பினும் கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த இசை, லேப்டாப்பிலிருந்து ஒலிக்கிறது என சொன்னார். முதன் முதலாக பின்னணி இசை ஒலிக்க, கதையை சொல்லி என்னை கவர்ந்தார்.

என்னுடைய திரையுலக பயணத்தில் மிக விரைவாக நடிக்க சம்மதம் தெரிவித்த திரைப்படம் ‘போர் தொழில்’. படத்தின் கதை சிறப்பாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தின் அளவைப் பற்றி கூட கவலைப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறோம். அதனால் நல்லதொரு தரமான கதையுடன் திரையில் தோன்ற வேண்டும் என விரும்பினேன். அது இந்த ‘போர் தொழில்’ படத்தில் இருக்கிறது. ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்கில் சந்திப்போம்.” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ” எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன். மிகத் திறமையான படைப்பாளி. கடும் உழைப்பாளி. விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் நன்றாக இருக்கும். அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன். இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.

இயக்குநரின் கற்பனையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம் என எண்ணினேன். என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது. சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அனுபவமிக்க நாசர் அவர்களுடனும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய பழகும் விதத்தை கண்டு வியந்திருக்கிறேன். அவரை சந்திக்க சினிமா, அரசியல்.. என பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வருகை தந்து கொண்டிருப்பர். அவர் எப்போதுமே பரபரப்பாகவே இருப்பார். இந்த வயதிலும் மதிய உணவாக சூப்பை அருந்துகிறார். அதன் பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவார். இது, அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் உருவாக்கியது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக ‘போர் தொழில் 2’ வில் நடிக்க விருப்பம்.