‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பிலிம்பேர் விருது விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பிலிம்பேர் விருதுகளில் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், விருது விழாவைப் புறக்கணிப்பதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். என்ன காரணம்?

மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மையத்தில் 68வது பிலிம்பேர் விருதுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை, பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். அவருடன் இணைந்து ஆயுஷ்மான் குரானா மற்றும் மனீஷ் பால் ஆகியோரும் தொகுத்து வழங்குகின்றனர். ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’, விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ரன்பீர் கபூரின் ‘பிரம்மாஸ்திரா’ உட்படப் பல படங்கள் இந்த விருதில் வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ‘இந்த பிலிம்பேர் விருதில் பங்கேற்க மறுக்கிறேன்’ என்று இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், “பிலிம்பேர் விருதில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இந்த நியாயமற்ற, சினிமாவிற்கு எதிரான இந்த விருது விழாவில் பங்கேற்க மறுக்கிறேன். காரணம் முக்கியமான நட்சத்திரங்களைத் தவிர வேறு யாருக்கும் உரிய அங்கீகாரத்தை இந்த விருதுகள் வழங்குவதில்லை.இந்த பிலிம்பேர் விருதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலி, சூரஜ் பர்ஜாத்யா போன்ற திறமை வாய்ந்த இயக்குநர்களின் புகைப்படங்கள் எங்கும் இடம்பெறவில்லை. சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட் போலவும், சூரஜ், மிஸ்டர் பச்சனைப் போலவும், அன்னேஸ் பாஸ்மி, கார்த்திக் ஆர்யனைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அதனால்தான் இந்த ஊழல் நிறைந்த, நியாயமற்ற விருதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விருதுகளை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். ஒரு திரைப்படத்தின் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்களை அடிமைகளாக நடத்தும் விருதுகளின் ஒரு பகுதியாக இருக்க நான் மறுக்கிறேன். இந்த விருதில் வெற்றி பெறுபவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்களுக்கு அதைவிட என்னுடைய சிறந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, பிலிம்பேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களைப் பயன்படுத்தாமல், பிலிம்பேர் விளம்பரங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த நடிகர், நடிகையரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதைக் குறிப்பிட்டுத்தான் விவேக் அக்னிஹோத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.