கமல் சாரை பார்த்து சினிமாவில் நுழைந்தேன் ; நடிகை சுவிதா ராஜேந்திரன்

 

 

தமிழ் சினிமாவில் கேரளா, ஆந்திரா மற்றும் மும்பையில் இருந்து கதாநாயகிகளை அழைக்க வந்து நடிக்க வைத்து வரும் அளவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக அதில் மாற்றம் ஏற்படுத்தும் விதமாக தமிழ் பெண்களும் நடிப்பை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தாமி என்கிற படத்தில் அறிமுகமாகிறார் நடிகை சுவிதா ராஜேந்திரன். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட இவர் எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்தார். இயல்பிலேயே சிறுவயதிலிருந்து இவருக்குள் இருந்த நடிக்கும் ஆசையால் முதலில் மாடலிங்கில் நுழைந்து அதன்பின் தற்போது தாமி என்கிற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியுள்ளார்.

நான்கு பையன்கள் நான்கு பெண்கள் என ஒரு ஜாலியான படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுவிதா. இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாநாயகியாக நடிகை சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார்.

சினிமாவிற்குள் தான் நுழைந்த அனுபவம் குறித்து சுவிதா ராஜேந்திரன் கூறும்போது, “சிறு வயதிலிருந்து எனக்கு கமல் சாரை ரொம்பவே பிடிக்கும். அதனால் எனக்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இத்தனைக்கும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் இல்லை. படிப்பை முடித்த பின்பு நடிக்க செல்கிறேன் என்றபோது ஆரம்பத்தில் எனது பெற்றோர்கள் தயங்கினார்கள்.. எதிர்ப்பு கூட தெரிவித்தனர்.

அதன்பிறகு சென்னைக்கு வந்து மாடலிங் துறையில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு என்னை தயார் படுத்திக் கொண்டேன். அதேபோல கூத்துப்பட்டறை கலைஞர் ஒருவரிடம் நடிப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.

அந்த படத்தில் இயக்குநர் பிரவீன் சொல்லிக் கொடுத்ததை பின்பற்றி வெகு இயல்பாக நடித்துள்ளேன். அதே சமயம் இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. “உங்களிடம் ஒரு ஃபயர் இருக்கிறது.. நன்றாக பண்ணுகிறீர்கள்” என இயக்குநர் பிரவீன் உற்சாகப்படுத்தினார்.

முதல் படம் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் எந்நேரமும் ஒரே பரபரப்பாக இருந்ததால் பெரிய அளவில் ஜாலி, கலாட்டா என இல்லாமல் எந்நேரமும் வேலை மட்டுமே பிரதானமாக இருந்தது. இந்த படம் வெளியாவதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

ஒரு பக்கம் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தாலும் படங்களில் நடிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். தற்போது பல பட வாய்ப்புகள் வருகின்றன ஆனால் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ரசிகர்கள் மனதில் நிற்கும்படியான நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.. அதற்காக காத்திருப்பதிலும் தவறு இல்லை” என்று கூறியுள்ளார்