இன்றளவும் கோலிவுட்வாசிகளை கவர்ந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் டைரக்ட் செய்துள்ள படம், ‘கண்ணை நம்பாதே’. இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்துள்ளார். இதை இயக்கிய மாறனிடம். “தொடர்ந்து இது போன்று சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் மர்டர் மிஸ்டரி கதைகளை எடுப்பது ஏன்..?” என்ற கேள்வி கேட்ட போது அவர் சொன்ன பதில் இதோ:
“அப்படி எல்லாம் எந்த திட்டமும் எனக்கு இல்லைங்க.. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை அடுத்து ஒரு லவ் ஸ்டோரி கதையை எழுதிக் கொண்டுதான் உதயநிதி சாரைப் போய்ப் பார்த்தேன். ஆனா அப்போ எனக்கு எப்படி இனி சஸ்பென்ஸ் கதை வேண்டாம் என்று தோன்றியதோ அதே போல் அவருக்கு ‘இனி காதல் கதை வேண்டாம். ஒரு சஸ்பென்ஸ் கதை செய்யலாம்’ என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை என்னிடம் சொல்லி, “வேறு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதை இருந்தால் சொல்லுங்கள்..!” என்று கேட்க இந்தக் கதையை சொன்னேன். கேட்டவுடன் அவருக்கு பிடித்து போய் “இதையே ஆரம்பித்து விடலாம்…” என்றார். இப்படித்தான் இந்தப் படம் உருவானது..!
இந்தப் படத்தின் முன் பாதியில் மட்டும்தான் பகலும் இரவும் கலந்த காட்சிகள் வரும். அது பல நாட்களின் தொடர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் இடைவேளைக்குப் பின் ஒரே இரவில் நடக்கும் காட்சிகள்தான் வரும். அப்படி ஒரு பரபரப்பான படமாக இது இருக்கும்.இந்தப் படத்தின் திரைக்கதை இதுவரை நாம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் பார்க்காத விதத்தில் இருக்கும். படம் முழுவதும் கொலைப் பின்னணியில் இயங்கும். ஒரு பிரச்சனையில் உதயநிதி சிக்கிக் கொள்ள அதைத் தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. அதனால் இந்த படத்தின் கதையை முழுவதும் அவரே சொல்வது போல் அமைந்திருக்கிறது. அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இருவருக்குமான காதல் காட்சிகள் படத்தில் சிறிய அளவுதான் இடம் பெற்றிருக்கும். ஆனால் ஆத்மிகாவின் பாத்திரத்தை வைத்துதான் கதையே நகரும்.!” என்றார்
கண்ணை நம்பாதே படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா சாவ்லா, சுபிக்ஷா, பழ. கருப்பையா என்று ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருக்கிறது. இது குறித்து மாறனிடம் கேட்டபோது “உதயநிதி ஸ்டாலின் சாருடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் என்று இரண்டு ஹீரோக்கள் நடித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் உண்டு. பூமிகா சாவ்லாவை சுற்றித்தான் கதையே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆக எந்த பாத்திரமும் தேவையில்லாமல் இந்த படத்தில் இருக்காது. ஒவ்வொரு பாத்திரத்துக்கான முக்கியத்துவத்துடன் படம் நகரும். உதயநிதி ஸ்டாலின் சாரின் ஒத்துழைப்பு இந்த படத்தில் வெகுவாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்தே நடித்தார். அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் இந்த படத்தை வெளியிடுகிறது இது இந்த படத்துக்கு கூடுதல் பலம்.
இந்த படம் ஆரம்பிக்கப்பட்டபோது உதயநிதி சார் எம்எல்ஏவாக மட்டும் இருந்தார். ஆனால் இப்போது அமைச்சர் ஆகி விட்டார். அதனால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தலாமா என்பது குறித்து தயாரிப்பாளருடன் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். உதயநிதி சாருடன் கலந்து பேசி இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வரும்…” என்ற மாறனுடன் இந்த சந்திப்பில் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ஜலந்தர் வாசனும், இசையமைத்துள்ள சித்து குமார் மற்றும் படத்தொகுப்பை மேற்கொண்டு இருக்கும் சான் லோகேஷும் உடனிருந்தனர்.
“படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இரவில் நடப்பதால் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது..!” என்ற ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனை தொடர்ந்து, “இந்தப் படத்தின் இசை எந்த கட்டுக்கொள்ளும் இல்லாமல் ஒலிகளின் ஊடே இணைந்து பயணத்திருக்கிறது..!” என்றார் இசையமைப்பாளர் சித்து குமார்.
“ஒரு சஸ்பென்ஸ் திரில்லரில் படத் தொகுப்பாளருக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய திருப்தியை தந்தது..!” என்றார் சான் லோகேஷ்.
“திமுகவின் முன்னணி தலைவர் நடித்த படத்துக்கு அதிமுக தலைவர் எம்ஜிஆர் பாடலின் வரியை தலைப்பாக வைத்திருக்கிறீர்களே..?” என்று மாறனிடம் கொக்கியைப் போட்டால், “அப்படியெல்லாம் யோசிக்கவே இல்லை. என் முதல் படத்தின் தலைப்பான இரவுக்கு ஆயிரம் கண்கள் ஒரு பாடலின் முதல் வரியிலேயே அமைந்திருந்தது. அதைப்போல இந்த கதைக்கு பொருத்தமாக கண்ணை நம்பாதே என்ற பாடலின் முதல் வரி இருந்ததால் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு எந்த அரசியல் நோக்கமும் இதற்கு கிடையாது..!” என்றும் குறிப்பிட்டுச் சொன்னாராக்கும்